CM Vijay: முதலமைச்சராக ஒரு மாதத்தை நிறைவு செய்த விஜய்.. நிகழ்ந்த மாற்றங்கள்.. ஒரு ரீவைண்ட்!
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது. இந்த ஒரு மாதத்தில் தமிழக அரசியல் களம் பல்வேறு மாற்றங்களை சந்தித்தது. அதேபோல் முதல்வராக விஜயின் செயல்முறை மக்களை கவர்ந்துள்ளது.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது. இந்த ஒரு மாதத்தில் நடந்த சம்பவங்கள் பற்றிக் காணலாம்.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த தேர்தலில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 84.69% வாக்குகள் பதிவானது. இந்த தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக களம் கண்டது. அக்கட்சி யாருடனும் கூட்டணி வைக்காமல் 231 தொகுதிகளில் தவெக வேட்பாளர்களை களமிறக்கி, ஒரு தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கும் ஆதரவு தெரிவித்து தேர்தலை சந்தித்தது. தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.
இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக இந்த தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வென்றது. ஆனால் மேஜிக் நம்பர் என சொல்லப்படும் ஆட்சியமைக்க தேவைப்படும் 118 என்ற பெரும்பான்மை இல்லாமல் விஜய் தவித்தார். இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்த விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவை விஜய் நாட கிட்டதட்ட 5 நாட்களுக்குப் பிறகே அவரால் பெரும்பான்மை பெற்ற முடிந்தது.
சி.ஜோசப் விஜய் என்னும் நான்...
இதனிடையே மே 10ம் தேதி காலை தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றார். அவருடன் 9 அமைச்சர்கள் அந்த நாளிலேயே பதவியேற்றுக் கொண்டனர். தொடர்ந்து விழா மேடையிலேயே சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டம், 200 யூனிட் மின்சாரம், போதைப்பொருள் தடுக்க அமைப்பு ஆகிய 3 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதேநாளி ல் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் திருச்சி கிழக்கில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
Also Read: Bose Venkat: விஜய் ஜெயிச்சாரு.. மொத்த மானத்தையும் வாங்கிய குடும்பம்.. போஸ் வெங்கட் வேதனை!
இதனையடுத்து மே 13ம் தேதி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் தலைமையிலான தவெக அரசு வெற்றி பெற்றது. 120 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் ஆட்சியமைத்த விஜய்க்கு எதிர்பாராத விதமாக அதிமுக எம்.எல்.ஏ.,க்களில் 25 பேர் ஆதரவு கொடுக்க, 145 பேரின் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் வெற்றி பெற்றார்.
களத்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றம்
இதனிடையே தேர்தல் வெற்றி பெற்றவுடன் மு.க.ஸ்டாலின், வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமான், அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இது மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்பட்டது. அதேசமயம் ஒரு அரசு ஊழியர் போல காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விஜய் தலைமைச்செயலகத்தில் தனது அலுவல் பணிகளை மேற்கொள்கிறார். இது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டார். அதேபோல் அம்மா உணவகங்களை புதுப்பித்து தரமான உணவு வழங்க உத்தரவிட்டது உள்ளிட்ட அறிவிப்புகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் அதைவிட ஒருபடி மேலே போய் திமுக, அதிமுக ஆட்சியில் சாத்தியப்படாது என சொல்லப்பட்ட கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரம் வழங்கி எதிர்கால தமிழ்நாட்டு அரசியலில் ஒரு மாற்றத்திற்கு வித்திட்டுள்ளார். காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளது.
அமைதி மூலம் பதிலடி
முதலமைச்சர் விஜய் எதிர்கட்சிகளை பேச விட்டு பதிலளிக்காமல் வேடிக்கைப் பார்க்கிறார், ஊடகங்களை சந்திக்க மறுக்கிறார் என பலவிதமான விமர்சனங்களை எதிர்க்கொண்டாலும் பதவியேற்ற நாளில் இருந்தே செயல்பாட்டின் மூலம் அனைத்திற்கும் அவர் பதிலளிக்க முடிவு செய்துள்ளதாக தவெக தரப்பினர் தெரிவித்துள்ளனர். அதேசமயம் தமிழ்நாட்டில் எழுந்துள்ள சட்டம் ஒழுங்கு பிரச்னை, மின்வெட்டு, போதைப்பொருட்களின் புழக்கம், பெண்கள் பாதுகாப்பு போன்றவை அவரது அரசுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Before You Go
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
ட்ரெண்டிங் செய்திகள்






















