Jayakumar Press Meet: முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்து பலவேறு அதிரடி குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்துள்ளார். 


அண்ணாமலைக்கு எச்சரிக்கை:


சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,  அண்ணாமலையின் பேச்சு கண்டிக்கத்தக்கது என்றும், அவர் மாநிலத் தலைவராக இருப்பதற்கு தகுதி இல்லாதவர் என கடுமையாக சாடினார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும், இவரது இந்த போக்கு தொடர்ந்தால், பாஜகவுடனான கூட்டணி குறித்து அதிமுக மறுபரிசீலனை செய்யப்படும் என கூறியுள்ளார். 


மேலும் அந்த நிலைக்கு அகில இந்திய தலைவர்கள் எங்களை கொண்டு செல்ல மாட்டார்கள், பாஜக தலைவர் நட்டா, பிரதமர் மோடி என பாஜக தலைவர்கள் எங்களது தலைவர்களுடன் நல்ல உறவைப் பேணுகிறார்கள். ஆனால் அண்ணாமலை மெச்சூரிட்டி இல்லாமல் தன்னை முன்னிலைப் படுத்த வேண்டும் என்ற நோக்கில் பேசி வருவதற்கு டெல்லியில் உள்ள பாஜக தலைவர்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது எங்களது எதிர்பார்ப்பாக உள்ளது. 


பொறுமையாக இருக்க முடியாது:


கூட்டணிக்கு இடையில் பிரச்சனையை யார் உருவாக்குகிறார்கள்? அது தான் முக்கியம், நாங்கள் பாஜகவை விமர்சிப்பது கிடையாது. எங்கள் கட்சியை சீண்டும் போது தான் நாங்கள் எதிர்வினையாற்றுகிறோம். அதற்கு ஒரு எல்லை உண்டு இதற்கு மேல் எங்களால் பொறுமையாக இருக்க முடியாது. அதனால், வாயை அடக்கிகொண்டு கூட்டணி தர்மத்தினை நீங்கள் கடைபிடித்தால் நல்லது, இல்லை என்றால் எங்களுக்கு இழப்பு கிடையாது. வெளிப்படையாக அம்மாவை விமர்சனம் செய்யும் போது அதிமுக தொண்டனால் அமைதியாக இருக்க முடியுமா? இதனை நாங்கள் தனிப்பட்ட முறையில் பாஜக மேலிடத்துக்கு கூறவேண்டிய அவசியமில்லை. நாங்கள் அதனால் தான் செய்தியாளர் சந்திப்பில் கடுமையாக கண்டிக்கிறோம்.


வாங்கி கட்டிக்குவாரு:


கூட்டணியில் அண்ணாமலையின் ரோல் எதுவும் கிடையாது, பாஜக மேலிடம் எங்களுடன் கூட்டணியில் இருக்கத்தான் விரும்புகிறது. நட்பு ரீதியாக நாங்கள் யாரையும் இழக்க விரும்பவில்லை. ஆனால் எங்களை விமர்சிப்பவர்களை உடன் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. திமுக காங்கிரஸ் கட்சியினர் கூட்டணியில் இருக்கும் போது விமர்சித்துக்கொள்கிறார்களா? இல்லை. ஆனால், அண்ணாமலை கட்டுச் சோற்றில் பெருச்சாலி போல் இருக்கிறார். இவ்வளவு நடந்த பின்னரும் அண்ணாமலை மீண்டும் வாய் அடக்கத்துடன் இல்லாவிட்டால் கண்டிப்பா வாங்கிக் கட்டிப்பார். இந்த செய்தியாளர் சந்திப்பே டெல்லி மேலிடத்துக்குத் தான், இப்படி பேசியவருடன் இணைந்து, கூட்டணி தர்மத்தில் எப்படி களத்தில் இறங்கி வேலை செய்ய முடியும்? அதிமுக அலமரம்.. பாஜக செடி என்றார். 


இவரது செய்தியாளர் சந்திப்பிற்குப் பின்னர் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி விரைவில் முறியும் என கூறப்பட்டு வருகிறது.