Jana Nayagan New Poster: தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் விஜய். இவர் கடந்தாண்டு தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார். வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் அரசியல் களத்தில் களமிறங்கியுள்ள விஜய், அரசியல் பணி காரணமாக திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

ஜனநாயகன் புதிய போஸ்டர்:

அவரது கடைசி படமாக எச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் உருவாகி வருகிறது. விஜய்யின் பிறந்த நாள் ஆண்டுதோறும் ஜுன் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாள் நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, ஜனநாயகன் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாக உள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது. 

சூரியனை பின்னுக்குத் தள்ளிய தளபதி:

இதற்காக படக்குழு போஸ்டர் ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த படத்தில் சூரியன் பின்னணியில் இருக்க அதை மறைத்து மக்கள் மத்தியில் இருந்து அவர்களுக்காக குரல் கொடுப்பது போல விஜய்யின் போஸ்டர் உள்ளது. ஜனநாயகன் படம் அரசியலுக்கு தொடர்பு அல்லாத படம் என்று எச்.வினோத் கூறியிருந்தாலும், படத்தின் தலைப்பு, படத்தின் போஸ்டர்கள் அனைத்தும் அரசியல் சாயத்துடனே வெளியாகி வருகிறது. 

இந்த நிலையில், இன்று வெளியாகியுள்ள போஸ்டரிலும் திமுக-வின் சின்னமான உதயசூரியனை மறைத்து விஜய் உதயமாவது போல போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாளை வெளியாக உள்ள ஜனநாயகன் பட அப்டேட்டிலும் ஆளுங்கட்சியான திமுக-வை விமர்சித்து கண்டிப்பாக வசனமோ, காட்சியோ, போஸ்டரோ இருக்கும் என்றே கருதப்படுகிறது. விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நாளை மறுநாள் 12 மணிக்கு இந்த படத்தின் முக்கிய அப்டேட் வெளியாக உள்ளது.

காத்திருக்கும் அரசியல் ட்ரீட்:

எச்.வினோத் இதற்கு முன்பு இயக்கிய சதுரங்கவேட்டை, தீரன் மற்றும் துணிவு ஆகிய படங்களில் சமுதாயத்தில் நடக்கும் சில அவலங்களை தனது திரைக்கதையில் காட்சிப்படுத்தியிருந்தார். விஜய்யின் கடைசி படமான இந்த படம் அவருக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் வகையில் உருவாகி வரும் அவரது கடைசி படமான இந்த படத்தில் கண்டிப்பாக அரசியல் நெடி அதிகளவில் அடிக்கும் என்றே கருதப்படுகிறது. 

ஏனென்றால், அடுத்தாண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு பொங்கல் கொண்டாட்டமாக இந்த படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை தமிழ்நாடு முழுவதும் வெற்றிப்படமாக மாற்ற தமிழக வெற்றிக் கழகத்தினர் முடிவு செய்துள்ளனர். 

எதிர்பார்ப்பு:

கன்னட திரையுலகின் மிகப்பெரிய தயாரிப்பு மற்றும் விநியோகஸ்த நிறுவனமான கேவிஎன் இந்த படத்தை தயாரித்து வருகிறது. விஜய்யின் இந்த கடைசி படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பூஜா ஹெக்டே, மமைதா பாஜு, சன்னி தியோல் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் தெலுங்கில் பாலையா நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்றும் பலரும் தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் கடைசி படம் என்பதாலும், தேர்தலுக்கு முன்பு வெளியாவதாலும் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.