Jallikattu 2024: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடப்பாண்டில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
ஜல்லிக்கட்டு போட்டிகள்:
ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக கருதப்படுகிறது. அதற்கு தடை விதிக்கக் கோரி ஒரு தரப்பு, உச்சநீதிமன்றம் வரை சென்றது. இதனை கண்டித்து மெரினாவில் வெடித்த புரட்சி, மாநிலம் முழுவதும் பரவி பெரும் போராட்டமாக மாறியது. ஒட்டுமொத்த நாடே திரும்பிப் பார்க்க வைத்த போராட்டத்தை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு என சிறப்பு சட்டம் இயற்றப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகுவிமரிசயாக நடத்தப்பட்டு வருகின்றன. இதில் வெற்றி பெறும் காளைகள் மற்றும் காளையர்களுக்கு ஏராளமான பரிசுகளும் வழங்கப்படுகின்றன. அந்த வரிசையில் நடப்பாண்டும் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட உள்ளது.
மதுரை ஜல்லிக்கட்டு:
மதுரையில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரசித்தியானவை. இதனை நேரில் காண்பதெற்கான பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு. இதில் உள்ளூர் காளைகள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த காளைகளும் பங்கேற்கும். அந்த வகையில் நடப்பாண்டிலும் மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
ஜல்லிக்கட்டு போட்டி தேதி:
அவனியாபுரத்தில் 15 ஆம் தேதியும் பாலமேட்டில் 16 ஆம் தேதியும் அலங்காநல்லூரில் 17 தேதியும் அடுத்தடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. அதை முன்னிட்டு இந்த மூன்று ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் காளைகள் மற்றும் வீரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமாக சுமார் 12,176 காளைகள் மற்றும் 4,514 வீரர்கள் போட்டியில் கலந்து கொள்ள தயாராக உள்ளனர். இதில் அவனியாபுரத்தில் 2,400 காளைகளும், பாலமேட்டில் 3,677 காளைகளும், அலங்காநல்லூரில் 6,099 காளைகளும் கலந்து கொள்ள உள்ளன. கடந்த ஆண்டு 9, 701 காளைகளும், 5,399 வீரர்களும் முன்பதிவு செய்திருந்தனர். இந்த ஆண்டு, காளைகளை அடக்கும் வீரர்கள் எண்ணிக்கை முன்பதிவு குறைந்தாலும் 2,475 காளைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கார் பரிசு:
முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் தேர்வாகும் சிறந்த காளைக்கு தலா ஒரு கார், அமைச்சர் உதயநிதி சார்பில் சிறந்த மாடுபிடி வீரருக்கு தலா ஒரு கார் பரிசாக வழங்கப்படும். மூன்று ஜல்லிக்கட்டிலும் மொத்தமாக 6 கார்கள் வழங்கப்பட உள்ளன.
ஜல்லிக்கட்டு அரங்கில் போட்டி:
அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் இம்மாத இறுதிக்குள் முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக சென்று திறந்துவைக்க உள்ளார். தொடக்க விழா நடைபெறும் நாள் முதல் தொடர்ந்து 5 நாட்கள் இந்த அரங்கில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் அரசு சார்பில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.