தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


புயல் அபாயம்:


வங்க கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அதே இடத்தில் இருந்து வருவதாகவும்,  இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்று அழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 3 ஆம் தேதி புயலாக வலுப்பெறும். பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து 4 ஆம் தேதி அதிகாலை வட தமிழகம் தெற்கு ஆந்திரா கடல் பகுதியில் புயலாக நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும்.  


சென்னையை பொறுத்தவரையில் நேற்று காலை அனேக இடங்களில் கனமழை பெய்தது. சென்னையில் நேற்று முந்தினம் பெய்த மழையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதற்கு பின் மழை படிப்படியாக குறைந்தது. நேற்று மாலை ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வந்த நிலையில் இரவு முதல் மழை இல்லை. இந்நிலையில் நாளை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மழை நிலவரம்:


தமிழ்நாட்டை பொறுத்துவரையில், அடுத்த 3 நாட்களுக்கு கனமழை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,  கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நாளை கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம்,  தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.


நாளை மறுநாள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை  மாவட்டங்கள்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.


டிசம்பர் 4 ஆம் தேதி புயல் உருவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.