கும்பகோணம் உள்ளிட்ட புதிய மாவட்டங்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி இராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:
’’தமிழ்நாட்டின் வருவாய் நிர்வாகத்தை செம்மைப்படுத்துவதற்கான மிக முக்கியமான கோரிக்கைகள் குறித்து, தமிழக முதலமைச்சராகிய தங்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்குடன் இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன்.
கும்பகோணம்:
தஞ்சாவூர் மாவட்டத்தின் முதன்மை நகரங்களில் ஒன்றான கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு, கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய வட்டங்களை உள்ளடக்கிய புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்பது அந்த பகுதிகளில் வாழும் மக்களின் முக்கியக் கோரிக்கை ஆகும். அவர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது என்பது ஒருபுறமிருக்க, மாவட்டத் தலைநகரமாக அறிவிக்கப்படுவதற்கான அனைத்துத் தகுதிகளும், வசதிகளும் கும்பகோணம் நகருக்கு உண்டு.
2 மாநகராட்சிகள்
தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 21 மாநகராட்சிகள் உள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு மாநகராட்சி மட்டுமே உள்ள நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும்தான் தஞ்சாவூர், கும்பகோணம் என இரு மாநகராட்சிகள் உள்ளன. தமிழ்நாட்டின் அனைத்து மாநகராட்சிகளும் மாவட்டத் தலைநகரமாகவோ அல்லது மாவட்டத்தின் ஒற்றை மாநகராட்சியாகவோ திகழும் நிலையில், கும்பகோணம் மாநகராட்சிக்கு மட்டும் இவற்றில் எந்த பெருமையும் இல்லை. மாவட்டத் தலைநகரமாக திகழும் மாநகராட்சி என்ற பெருமையை கும்பகோணத்திற்கு வழங்க வேண்டும் என்பதுதான் அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.
தஞ்சாவூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கும்பகோணம் மாநகரில்தான் அமைந்துள்ளது. கும்பகோணம் மாநகரம் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்து முக்கிய நகரங்களுடனும் சாலை வழியாகவும், ரயில் பாதை வழியாகவும் இணைக்கப்பட்டுள்ளது. ஆந்திரம், தெலங்கானம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களின் தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் இருந்து கும்பகோணத்திற்கு ரயில்களும், பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
150 ஆண்டுகளுக்கு முன் 1868-ஆம் ஆண்டிலேயே கும்பகோணம் தலைநகரமாக திகழ்ந்திருக்கிறது. மாவட்டத் தலைநகரத்திற்கு தேவையான கூடுதல் கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கு தேவையான நிலங்கள் கும்பகோணத்திலும், அதன் புறநகர் பகுதிகளிலும் ஏராளமாக உள்ளன. கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைப்பதற்கு இதைவிட தகுதிகள் தேவையில்லை.
25 ஆண்டுகாலக் கோரிக்கை
கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை 25 ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் இந்த கோரிக்கையை முன்வைத்து அறவழிப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதில் உள்ள நியாயத்தை தாங்களும் அங்கீகரித்து இருக்கிறீர்கள். 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18-ஆம் நாள் கும்பகோணத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தாங்கள், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தஞ்சாவூர் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தீர்கள். அதை நிறைவேற்றுவதற்கான நேரம் இப்போது வந்துவிட்டது.
தமிழ்நாட்டில் கும்பகோணம் மட்டுமின்றி, திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், சேலம், கோவை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் 25 லட்சத்திற்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 8 ஆகும். மக்கள்தொகை அடிப்படையில், இன்றைய நிலையில் பெரிய மாவட்டம் திருவள்ளூர் ஆகும். அதன் மக்கள்தொகை 37 லட்சம். அடுத்து சேலம், கோவை ஆகிய மாவட்டங்கள் தலா 35 லட்சம் மக்கள்தொகையுடன் அடுத்த இரு இடங்களை வகிக்கின்றன. இந்த மாவட்டங்கள் உலகிலுள்ள 103 நாடுகளை விட அதிக மக்கள் தொகை கொண்டவை. ஒரு நாட்டை விட ஒரு மாவட்டத்தின் மக்கள்தொகை அதிகமாக இருக்கும் போது, அங்கு வளர்ச்சி சாத்தியமாகாது.
38 மாவட்டங்கள்
சிறியவையே வளர்ச்சி என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை. மாவட்டங்களைப் பிரித்து சிறிய மாவட்டங்களை உருவாக்குவது வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. 1956-ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழ்நாட்டில் 13 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன. இப்போது அதை விட இரு மடங்கு கூடுதலாக 38 மாவட்டங்கள் உள்ளன. அதன் காரணமாக கட்டமைப்பு வசதிகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்திருக்கின்றன.
தமிழ்நாட்டிலும் கும்பகோணம் உள்ளிட்ட புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும்போது மாவட்ட நிர்வாகம் மேம்படும்; உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அரசு அமைக்க வேண்டும்.
அதேபோல், தமிழ்நாட்டில் மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டங்களையும் பிரித்து, 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்ற அளவில் புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், அதில் கும்பகோணம் உள்ளிட்ட புதிய மாவட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சராகிய தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்’’.
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.