Savukku Sankar: யூடியூபர் சவுக்கு சங்கர் மீது நான்கு பிரிவுகளில் தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.


போராட்டத்தில் பங்கேற்ற சவுக்கு சங்கர்:


காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைய உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு வகைகளிலும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 26ம் தேதி விமான நிலைய எதிர்ப்புக் குழு, உண்ணாவிரத போராட்டம் நடத்தியது. அந்த போராட்டத்தில் பங்கேற்க யூடியூபர் சவுக்கு சங்கருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தனிநபராக மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு இருந்த நிலையில், சவுக்கு சங்கருடன் 7 கார்களில் 15-க்கும் மேற்பட நபர்கள் அங்கு சென்றனர்.


காவல்துறையினருடன் வாக்குவாதம்: 


அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் நபர்களுடன் வந்ததால், சவுக்கு சங்கரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் இரண்டு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறையின் எச்சரிக்கையையும் மீறி,  சவுக்கு சங்கர் போராட்டத்தில் பங்கேற்றதோடு, அரசுக்கு எதிரான தனது கண்டனங்களையும் பதிவு செய்தார். 


சவுக்கு சங்கர் மீது வழக்கு:


இந்நிலையில் காவல்துறையின் எச்சரிக்கை மற்றும் தடையை மீறி, போராட்டத்தில் பங்கேற்ற சவுக்கு சங்கர் உள்ளிட்ட 17 பேர் மீது 4 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, கலவரத்தை விளைவித்தல் என 147 வது பிரிவு, அவதூறு பரப்பியதாக 294 பி பிரிவு, கொலை மிரட்டல் விடுத்தாக 561 (1) பிரிவு மற்றும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக 353 வது பிரிவு ஆகியவற்றின் கீழ் சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் ஒன்று பிணையில் வர முடியாத வழக்கு என்பதால், சவுக்கு சங்கர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.