Kutralam Falls Status : குற்றாலத்திற்கு டூர் செல்ல திட்டமா.? அருவியில் தண்ணீர் கொட்டுதா.? லேட்டஸ்ட் அப்டேட் இதோ..
Kutralam Falls Status : தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீச தொடங்கியுள்ளது. இந்த நிலையில் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் தண்ணீர் விழுகிறதா.? சுற்றுலா பயணிகள் செல்லலாமா என்பதை தற்போது பார்க்கலாம்.

குற்றால அருவி- டூர் செல்ல திட்டமா.?
குற்றால அருவி தமிழ்நாட்டின் தென்மாவட்டமான தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற இயற்கை அருவி ஆகும். மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள இந்த அருவியானது இயற்கையின் சொர்க்கமாக அழைக்கப்படுகிறது. அந்த வகையில் குற்றாலத்தை சுற்றி மெயின் அருவி, ஐந்தருவி, செண்பகா தேவி அருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் என பல அருவிகள் உள்ளது. இதில் மெயின் அருவியில் குளிக்கவே மக்கள் அதிகளவில் விரும்புவார்கள். அந்த வகையில் தண்ணீரில் மூலிகை மணம் கலந்திருப்பதால், இங்கு குளிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குற்றாலத்தில் எப்போது சீசன்.?
குற்றாலத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் மக்கள் சுற்றுலா செல்வார்கள். அதிலும் தென்மேற்கு பருவமழை சீசனான ஜூன் முதல் செப்டம்பர் வரை தமிழகத்தில் இருந்து மட்டுமல்ல பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் குவிவார்கள். இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெற்றோர்களோடு வெளியூர்களுக்கு சுற்றுலா செல்ல தொடங்கியுள்ளனர். அந்த வகையில் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட குளுமையான இடங்களுக்கு மக்கள் சென்று வரும் நிலையில், குற்றாலத்திற்கு சுற்றுலா செல்லலாமா.? அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறதா.? விசாரித்து வருகிறார்கள்.
குற்றால அருவிகளில் நிலை என்ன.?
இந்த நிலையில் குற்றாலத்தில் எப்போது சீசன் தொடங்கும், அருவிகளில் தண்ணீர் விழுகிறதா.? என்பதை பார்க்கலாம். அந்த வகையில் குற்றாலத்தில் முக்கிய அருவிகளில் ஒன்றாக இருப்பது மெயின் அருவி இந்த அருவியில் தண்ணீர் முற்றிலுமாக இல்லை. அதிலும் பராமரிப்பு பணி காரணமாக குற்றாலம் மெயின் அருவி மூடப்பட்டுள்ளது. அடுத்ததாக பழைய அருவி இங்கும் தண்ணீர் விழவில்லை மேலும் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் இங்கும் குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. அடுத்தாக ஐந்தருவி இங்கு ஒரு கிளையில் மட்டும் சிறிதளவு தண்ணீர் விழுகிறது. அதில் சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று குளித்து செல்கிறார்கள்.
குற்றாலத்திற்கு சுற்றுலா செல்லலாமா.?
புலி அருவி மற்றும் சிற்றருவி முற்றிலும் தண்ணீர் இல்லாமல் வறண்டுள்ளது.மேலும் கேரளா எல்லையில் உள்ள அச்சன் கோவில், கும்பாவுருட்டி அருவியிலும், ஆரியங்காவு பாலருவி என எங்கேயும் தண்ணீர் இல்லாத நிலை தான் நீடித்து வருகிறது. எனவே குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் தற்போது வருவதை தவிர்ப்பது நல்லது. அடுத்தாக தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்காசி மாவட்டத்தில் தென்பட தொடங்கியுள்ளது.
அதற்கு ஏற்ப தென்மேற்கு பருவகாற்று வீச தொடங்கியுள்ளது. ஒட்டு மொத்தமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தேன்மேற்கு பருவக்காற்று வலுப்பெற்றுள்ளதால் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது.எனவே ஜூன் முதல் வாரத்தில் குற்றால அருவியில் தண்ணீர் கொட்ட வாய்ப்பு இருப்பாக கூறப்படுகிறது. எனவே சுற்றுலா பயணிகள் ஜூன் மாதம் குற்றாலத்திற்கு செல்ல திட்டமிடலாம்.
ட்ரெண்டிங் செய்திகள்





















