தஞ்சாவூர்: வீட்டிலிருந்தபடியே ரேஷன் கடை திறந்து இருக்கான்னு தெரிஞ்சுக்கலாம். அட ஆமாங்க. செல்போன் இருந்தால் போதும். சில நொடியிலேயே தெரிஞ்சுக்கலாம்.

Continues below advertisement

பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு தேவையில்லாமல் சென்று அலைவதைத் தவிர்க்கவும், அத்தியாவசியப் பொருட்களை சிரமமின்றி பெறவும், தமிழக பொது விநியோகத் திட்டத்தின் (PDS) கீழ் பயனுள்ள குறுந்தகவல் (SMS) சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சேவையின் மூலம், ரேஷன் கடை திறந்துள்ளதா அல்லது மூடப்பட்டுள்ளதா என்பதை வீட்டிலிருந்தபடியே செல்போன் மூலம் சில நொடிகளில் தெரிந்துகொள்ள முடியும்.

இந்த வசதி குறிப்பாக முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், வேலைக்குச் செல்லும் நபர்கள் மற்றும் தொலைதூர கிராமங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Continues below advertisement

ரேஷன் கடை திறந்திருப்பதை தெரிந்துகொள்வது எப்படி?

உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணில் இருந்து,

PDS 102

என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும்.

சில நிமிடங்களுக்குள், உங்களுக்குரிய நியாயவிலைக் கடை தற்போது திறந்திருக்கிறதா அல்லது இல்லை என்பது குறித்த தகவல் குறுந்தகவலாக (SMS) அனுப்பப்படும். இதன் மூலம், தேவையற்ற பயணத்தையும் நேர விரயத்தையும் தவிர்க்க முடியும்.

புகார் தெரிவிக்கவும் எளிய வசதி

ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதில் தாமதம், கடை திறக்காதது, ஊழியர்களின் அலட்சியம், குறைவான அளவில் பொருட்கள் வழங்குதல் அல்லது வேறு ஏதேனும் குறைகள் இருந்தால், அதையும் எளிதாக பதிவு செய்யலாம்.

அதற்கு,

PDS 107

என டைப் செய்து அதே 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், புகார் பதிவு செய்யும் வசதி கிடைக்கும்.

புகார்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.

பொதுமக்களுக்கு கிடைக்கும் நன்மைகள்

இந்த எஸ்எம்எஸ் சேவை மூலம் ரேஷன் கடை திறந்துள்ளதா என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளலாம். தேவையற்ற அலைச்சல் மற்றும் நேர விரயத்தை தவிர்க்கலாம். முதியவர்கள் மற்றும் பெண்களுக்கு பெரும் வசதியாக இருக்கும். புகார்களை நேரடியாக பதிவு செய்து விரைவான தீர்வு பெறலாம். பொது விநியோகத் திட்ட சேவைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு அதிகரிக்கும்.

கவனிக்க வேண்டியவை

இந்த சேவையை பயன்படுத்தும் போது, ரேஷன் அட்டையுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து மட்டுமே குறுந்தகவல் அனுப்ப வேண்டும். இல்லையெனில், சேவை சரியாக செயல்படாமல் இருக்கலாம்.

மேலும், ரேஷன் கடை தொடர்பான கூடுதல் தகவல்கள் அல்லது உதவிகள் தேவைப்பட்டால், அருகிலுள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலகம் அல்லது சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடை அதிகாரிகளை தொடர்புகொள்ளலாம். இந்த டிஜிட்டல் சேவை மூலம், ரேஷன் கடை தொடர்பான தகவல்களை பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ளவும், குறைகளை உடனுக்குடன் தெரிவிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளதால், பொது விநியோகத் திட்ட சேவைகள் மேலும் திறம்பட செயல்பட உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கியமாக முதியவர்கள் வெயிலில் அலைந்து கடை திறக்காவிடில் நொந்து நூடுல்ஸ் ஆவதை தவிர்க்கலாம். அப்புறம் என்ன எடுங்க போனை தட்டுங்க எஸ்எம்எஸ்சை. கடை திறந்திருந்தா போங்க. இல்லாட்டி ஹாயா எடுங்க ரெஸ்ட். சரியான முறையில் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள் மக்களே.