மாசற்ற காற்று என்ற கருத்தை  மைய்யமாகக் கொண்டு இந்திய அளவிலான பெரும்  மாநாடு பெங்களூருவில் நடைபெற்றது. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்விற்கான மையமும் (Center for Study of Science, Technology, and Policy (CSTEP), காற்று மாசுபாடு ஆய்வு மையமும் (Centre for Air Pollution Studies (CAPS) இணைந்து இந்த மாநாட்டினை நடத்தின.  இம்மாதம் அதாவது ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் 25 வரை இந்த  மாநாடு பெங்களூருவில் நடைபெற்றது.


இந்த மாநாட்டிற்குப் பின்னர் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் குறிப்பு நம்மை அச்சத்தில் ஆழ்த்தும் வண்ணம் இருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க ஏதுவாக எச்சரிக்கை விடுக்கும் விதமாக உள்ளது. அதாவது அந்த ஆய்வின் முன்னிரையில் ICAS இன் ஐந்தாவது பதிப்பில், நிலையான வளர்ச்சியுடன் தூய்மையான காற்றுக்கு முன்னுரிமை அளிப்பதன் அவசியத்தையும், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் இந்தியாவின் மிக லட்சியக் கொள்கையான மிஷன் லைஃப்-ஐயும் ஆராயத் திட்டமிட்டுள்ளோம் எனவும்,  காற்று மாசுபாட்டின் அதிகரிப்பு, பொது சுகாதாரத்தை கடுமையாக பாதிக்கிறது. மேலும் இந்தியா போன்ற  வளரும் நாடுகளில் பொருளாதாரத்தை மந்தமாக்குவதுடன் சுற்றுச்சூழலை பாதிக்கிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 76 நகரங்களில் எந்த அளவிற்கு காற்று மாசு அடைந்துள்ளது என CSTEP தயாரித்துள்ள ஆய்வு முடிவில் விளக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிவின், முன்னுரிமை அடிப்படையில் காற்று மாசைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், 2030 ஆம் ஆண்டில் சென்னையில் Particulate Matter (PM) 2.5 எனும் நுண் துகள் மாசின் வெளியேற்றம் 27% அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 


2019-20 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, சென்னை, மதுரை, திருச்சி மற்றும் தூத்துக்குடி ஆகிய தமிழ்நாட்டின் நான்கு மாவட்டங்களில் வெளியேற்றப்படும் மாசு தொடர்பான விரிவான அறிக்கை (Emissions Inventory) அடிப்படையில் ஆய்வு ஒன்றை CSTEP மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வில் அனல் மின் நிலையங்கள் உள்ளிட்ட கனரக தொழிற்சாலைகள் இருப்பதால், தூத்துக்குடியில் Particulate Matter (PM) 2.5 எனும் நுண் துகள் மாசின் வெளியேற்றம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


இந்த ஆய்வின்படி, சென்னையின் மாசு வெளியேற்றம் தூத்துக்குடியை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமாகி இருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. மாசைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் விரைவாக எடுக்காமல், தற்போது உள்ளபடியே தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்து சேவைகள் தொடர்ந்தால் 2030- ம் ஆண்டை எட்டும்போது  சென்னையில் அதிகபட்சமாக  காற்று மாசு என்பது 27 விழுக்காடும், திருச்சியில் 25 விழுக்காடும், மதுரையில் 20 விழுக்காடும், தூத்துக்குடியில் 16 விழுக்காடும் அதிகரிக்கும் என்று CSTEP ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.


சென்னை, திருச்சி, மதுரை தூத்துக்குடி என அதிக விழுக்காடு காற்று மாசு இருப்பதால், முன்னுரிமை அடிப்படையில் காற்று மாசைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நடவடிக்கைகள் மேற்கொண்டால் மட்டும் தான்  2030க்குள் மாசு வெளியேற்றத்தின் அளவை தற்போதுள்ள நிலையிலிருந்து திருச்சியில் 36 விழுக்காடும், மதுரையில் 27 விழுக்காடும், சென்னையில் 27 விழுக்காடும், தூத்துக்குடியில் 20 விழுக்காடும் குறைக்க முடியும் என இந்த ஆய்வின் மூலம் விளக்கப்பட்டுள்ளது. 


இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள CSTEP மையத்தின் மூத்த ஆய்வாளர் டாக்டர். ப்ரதிமா சிங் கூறுகையில், “எரிபொருள் பயன்பாட்டை நிலக்கரியில் இருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாற்றுவது, தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்தில் வெளியாகும் மாசைக் குறைக்க கடுமையான கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றுவது,  தரமான சாலை உள்கட்டமைப்பு  போன்றவற்றிக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் காற்று மாசைக் குறைக்கமுடியும்” எனக் குறிப்பிட்டார்.