IRCTC website upgrade:இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி., (IRCTC) இணையதளம் மற்றும் அதன் செயலியில், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. தற்போதைய நிலவரப்படி, 82 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் ஐ.ஆர்.சி.டி.சி., வாயிலாகவே தங்களது ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கின்றனர். இந்நிலையில், ஐ.ஆர்.சி.டி.சி.,-யின் மேம்படுத்தப்பட்ட இணையதளம், நான்கு புதிய சிறப்பு அம்சங்களுடன் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

Continues below advertisement

தட்கால் முன்பதிவு சிக்கல்களும் பயணிகளின் சிரமங்களும்

வழக்கமாக தட்கால் முன்பதிவின் போது, கடுமையான 'சர்வர்' (Server) பிரச்சனை ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. அதுமட்டுமின்றி, 'கேப்ட்சா' (Captcha) குறியீடுகளும் மிகவும் கடினமாக இருக்கின்றன. இத்தகைய தொழில்நுட்பக் கோளாறுகளால், டிக்கெட் முன்பதிவு செய்வதில் பயணிகள் தொடர்ந்து பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வந்தனர்.

ரயில்வே அமைச்சரின் உறுதிமொழி

கடந்த சில வாரங்களுக்கு முன், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார். அப்போது, மாணவர்கள் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் உள்ள இந்த தொழில்நுட்பக் குறைபாடுகளை அவரிடம் சுட்டிக்காட்டினர். இந்த குறைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என ரயில்வே அமைச்சர் அப்போது உறுதி அளித்திருந்தார்.

Continues below advertisement

4 முக்கிய மேம்பாடுகள்: தயார் நிலையில் புதிய தளம்

ரயில்வே அமைச்சரின் உறுதிமொழியின்படி, தற்போது பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் மேம்படுத்தப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே பயணியர் ஆலோசனை குழு உறுப்பினர் ஜாபர் அலி கூறியதாவது: டிக்கெட் முன்பதிவை எளிமையாகவும், எவ்வித தடையின்றியும் செய்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டு, நான்கு முக்கிய மேம்பாடுகள் இந்த புதிய தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. இது பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும். பயணிகளின் நீண்ட நாள் குறையைப் போக்கும் வகையில், இந்த மேம்படுத்தப்பட்ட புதிய இணையதளம் விரைவில் முழுமையான பயன்பாட்டிற்கு வரவுள்ளது  குறிப்பிடத்தக்கது.