உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. உள்ளிட்ட  ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.


ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்:


இதுதொடர்பாக உள்துறை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி “உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அந்த பொறுப்பை உளவுத்துறையின் ஐ.ஜி. ஆக உள்ள செந்தில்வேலனே கூடுதலாக கவனிப்பார். ஆவடி காவல்துறை ஆணையராக இருந்த  அருண் சட்டம் ஒழுங்கு  ஏ.டி.ஜி.பி. ஆகவும்,  அவர் வகித்து வந்த ஆவடி காவல்துறை ஆணையர் பதவிக்கு சங்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஐபிஎஸ் அதிகாரிகளின் விவரங்கள்:


உளவுத்துறை ஏடிஜிபி ஆக இருந்த டேவிட்சன் தேவாசிர்வாதம், காவல்துறை தலைமையிட அலுவலகத்தின் ஏ.டி.ஜி.பி. ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆவடி மாநகர காவல் ஆணையராக இருந்த அருண் ஐபிஎஸ், தற்போது சென்னையில் சட்ட-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பதவியை வகித்து வந்த சங்கர் தற்போது, ஆவடி மாநகர காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். உளவுத்துறை ஐ.ஜி. ஆக உள்ள செந்தில்வேலனே, டேவிட்சன் தேவாசிர்வாதம் வகித்து வந்த உளவுத்துறை ஏ.டி.ஜி.பி பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


டேவிட்சன் தேவாசிர்வாதம்:


 


டேவிட்சன் தேவாசீர்வாதம் 1995ஆம் ஆண்டு தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் பேட்சை சேர்ந்தவர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்த முதலூரைச் சேர்ந்த டேவிட்சன் தேவ ஆசீர்வாதம். எஸ்.பி, டிஐஜி, ஐஜி, உளவுத்துறை ஏடிஜிபி என படிப்படியாக முன்னேறி வந்துள்ளார். முதல்வர் ஸ்டாலினின் குட்புக்கில் இடம்பெற்ற தேவாசீர்வாதத்திற்கு, உளவுத்துறை ஏடிஜிபி பதவி கொடுக்கப்பட்டது.


பதவி பறிப்பு ஏன்?


கடந்த இரண்டு ஆண்டுகளில் டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது பல்வேறு சர்ச்சைககள் வெடித்துள்ளன. பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் போலி ஆவணங்கள் மூலம் சரிபார்கப்பட்டதாக பாஜக குற்றம்சாட்டியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி பலியானதைத் தொடர்ந்து நடந்த கலவரம் உள்ளிட்ட சில நிகழ்வுகள் உளவுத்துறை தோல்வியை எடுத்துக்காட்டுவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இதுபோன்ற சம்பவங்களை ன்கூட்டியே கணித்து காவல்துறையை எச்சரிக்க வேண்டியது உளவுத்துறையின் கடமை. ஆனால், உளவுத்துறை அதில் கோட்டைவிட்டதால் முதலமைச்சர் ஸ்டாலின் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது தொடர்பாகவும், முன்கூட்டியே தகவல் தெரிவிக்காததால் தான் உளவுத்துறை ஏடிஜிபி ஆக இருந்த டேவிட்சன் தேவாசிர்வாதம் தற்போது முக்கியத்துவம் இல்லாத பதவிக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது,


சட்ட-ஒழுங்கிற்கு புதிய டிஜிபி:


சட்ட-ஒழுங்கு டிஜிபி ஆக உள்ள சைலேந்திர பாபு வரும் 30ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து அந்த பதவிக்கு புதிய ஐபிஎஸ் அதிகாரியை தேர்வு செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான், உளவுத்துறை ஏ.டி.ஜி.பி உள்ளிட்ட 4 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.