IPL 2026 SRH vs GT: முதல் அணியாக ப்ளே ஆஃப் செல்லப்போவது ஹைதரபாத்தா? குஜராத்தா? இதோ தொடங்கியது ஆட்டம்!
IPL 2026 SRH vs GT: ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் அணிக்குச் செல்லப்போகும் முதல் அணி யார்? என்பதை தீர்மானிக்கும் போட்டியில் குஜராத் - சன்ரைசர்ஸ் அணி மோதல் இன்று நடக்கிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடர் தற்போது அடுத்தகட்டத்தை எட்ட உள்ளது. 19வது சீசனில் இருந்து மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் அதிகாரப்பூர்வமாக எலிமினேட் ஆகியுள்ள நிலையில், ப்ளே ஆஃப் சுற்றுக்கு போட்டிகள் தீவிரம் அடைந்துள்ளது.
ப்ளே ஆஃப் செல்லப்போவது யார்?
பஞ்சாப் அணி நேற்று நடந்த போட்டியில் டெல்லியுடன் தோற்றுள்ள நிலையில் ப்ளே ஆஃப்-க்கான போட்டி மேலும் வலுவாகியுள்ளது. இந்த சூழலில், இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி 16 புள்ளிகள் பெற்று முதல் அணியாக ப்ளே ஆஃப் வாய்ப்பிற்கு தகுதி பெறும்.
இந்த தொடரின் தொடக்கத்தில் சற்று சொதப்பலாக ஆடிய இந்த இரு அணிகளும் அடுத்தடுத்த போட்டிகளில் அபாரமாக ஆடி ப்ளே ஆஃப்-க்கு தகுதி பெறும் அணிகளின் போட்டியில் முதன்மையாக உள்ளது. இதனால், இன்று வெற்றி பெற்று ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்வதிலே இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதால் இந்த போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீசுகிறது. சொந்த மைதானத்தில் ஆடும் குஜராத் அணி வலுவான இலக்கை நிர்ணயிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பேட்டிங், பவுலிங் பலம்:
இரு அணியைப் பொறுத்தமட்டிலும் இளமையும், அனுபவமும் கொண்டவர்கள் உள்ளனர். குஜராத் அணியில் கேப்டன் கில், சாய் சுதர்சன், பட்லர், வாஷிங்டன் சுந்தர், ஹோல்டர், திவேதியா என பேட்டிங் ஆர்டர் வலுவாக உள்ளது. சன்ரைசர்ஸ் அணியைப் பொறுத்தமட்டில் அபிஷேக் சர்மா, ட்ராவிஸ் ஹெட், கிளாசென், நிதிஷ் ரெட்டி என பேட்டிங் ஆர்டர் வலுவாக உள்ளது.
பந்துவீச்சைப் பொறுத்தமட்டில் சன்ரைசர்ஸ் அணியில்- கம்மின்ஸ், பிரபுல் ஹிஞ்சே, ஹசன், ஹர்ஷல் படேல், நிதிஷ் ரெட்டி, ஈஷன் மலிங்கா என வலுவாக வைத்துள்ளனர். குஜராத் அணிக்கு முகமது சிராஜ், ரபாடா, பிரசித் கிருஷ்ணா, ரஷீத் கான் என வலுவாக உள்ளனர்.
அனல்பறக்கும் போட்டிகள்:
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக உள்ள இந்த இரு அணிகளில் ஒரு அணி வெற்றி பெற்று ப்ளே ஆஃப் வாய்ப்பை இன்று உறுதி செய்யும். இதையடுத்து, அடுத்த 3 இடங்களைப் பிடிப்பதற்கு மற்ற அணிகள் மல்லுகட்டும். இனி வரும் ஒவ்வொரு போட்டியும் ஒவ்வொரு அணிகளின் ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும் போட்டியாக பார்க்கப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்





















