தமிழ்நாட்டில் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இருக்கைகள் வழங்குவதற்கான சட்டத்திருத்தம் செய்ய முடிவு செய்து, சட்டமுன்வடிவை சட்டப் பேரவையில் அமைச்சர் திட்டக்குடி கணேசன் இன்று தாக்கல் செய்தார். இதற்கு பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.


‘அங்காடி தெரு’ படம் மூலம் கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பிரச்னைகளை வெளிஉலகுக்கு தெரியவந்த இயக்குநர் வசந்த பாலன் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த இந்த சட்டத்திருத்தம் குறித்து ஏபிபி நாடு செய்திக்கு பிரத்யேகமாக அளித்த பேட்டி.


கேள்வி: ஒரு துணிக்கடையில் வேலை செய்பவர்கள் அமர்வதற்கு நாற்காலி போட சொல்ல ஒரு சட்டம் நம் நாட்டில்  தேவைப்படுவது ஆச்சரியமாக உள்ளது.


பதில்: கண்டிப்பா, தொழிலாளர்களுடைய ரத்தத்தை உறிஞ்சிதான், இவ்வளவு மாட மாளிகைகள், கோபுரங்கள் எல்லாமே நிற்கிறது. முடிஞ்ச அளவுக்கு உறிஞ்சிதான் எல்லாத்தையும் அவங்க முயற்சி செய்வார்கள். இப்ப வந்து அவங்களுக்கு தண்ணீர் கொடுங்கள் ஒரு சட்டம் போடசொல்லனும் போல, நாற்காலி கொடுக்க வேண்டும் என ஒரு சட்டம் தற்போது வந்துள்ளது. மிகவும் கவலை அளிப்பதாக இருக்கிறது. இந்த விஷயத்தில் மகிழ்வதற்கு ஒன்றுமில்லை. இத்தனை ஆண்டுகள் கழித்து ஒரு அரசுதான் இதனை வலியுறுத்த வேண்டுமா?. மாஸ்க் போடுங்கள் என்று அரசு கூறுவது வேதனையாக உள்ளது. நம்ம தொழிலாளர்கள் நம்முடைய நலனுக்காகதான் 24 மணி நேரமும் வேலை செய்கிறார்கள். அவர்களை கவனிக்கவேண்டியது, பாதுகாப்பாக வைத்துக்கொள்வது அந்த நிறுவனத்தின் கடமை. ஆனால், இதனை எல்லாம் ஒரு அரசு கண்காணிக்க வேண்டிய நிலைமை இங்குள்ளது. நாளைக்கு நாற்காலி போட்டார்களா என்று ஒரு அதிகாரி அதனை கண்காணிக்க வேண்டும். நம் ஊரில் சட்டத்திற்கு பஞ்சமே இல்லை. ஆனால், யாரும் அதை அமுல்படுத்தவில்லை அவ்வளவுதான்.




கேள்வி: மனிதநேயமிக்கவர்கள் அவர்கள் கடையில் அவர்களே சட்டத்தை செயல்படுத்தலாமே


பதில்: வீட்டில் ஒருவராக தொழிலாளர்களை வைத்துக்கொள்வது, ரொம்ப முக்கியமான தேவை இங்குள்ளது. நமது நலனுக்காக தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஆனால், அதை தாண்டி அவர்களை உறவினர்கள் போல் நடத்த வேண்டும். ஆனால், இதில் என்ன முக்கியமான பாராட்ட வேண்டிய விஷயம் என்றால், ஒரு அரசு வந்து சின்ன, சின்ன விஷயங்களை எல்லாம் காது கொடுத்து கேட்கிறது. இது பாராட்டக்கூடியது.  கேரளாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த சட்டத்தை நிறைவேற்றினார்கள். தற்போது, தமிழ்நாட்டில் இந்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளார்கள். தொடர்ந்து, இந்த அரசு சிறியது முதல் பெரியது வரை மக்களின் பிரச்னைகளை கூர்ந்து கவனிக்கிறது. சமீபத்தில், பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க ரூ.200 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. இவையெல்லாம், ஒரு நுண்ணிய பார்வை என்று கூறுவேன். ஒரு சமூகத்தில், பெரிய விஷயங்களை கவனிப்பது மட்டுமல்லாமல் நுண்ணிய விஷயங்களையும் கவனிப்பது முக்கிமானதாகும். நுண்ணிய விஷய கவனிப்பாக, இலங்கை தமிழர் பிரச்னையை கூர்ந்து கவனிப்பது. கோயில்களில் மூன்று நேரம் உணவு அளிப்பது. கோயில்களில் இனி மொட்டை அடிக்க கட்டணம் கிடையாது. இன்று துணிக்கடையில் தொழிலாளர்கள் உட்காருவதற்கு நாற்காலி வழங்க வேண்டும் என்ற சட்டங்களை போடுவதை பார்த்தால், அரசு தன்னுடைய மக்களை அன்போடு கவனித்து கொள்கிறது. கூர்மையாக கவனிக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. திமுக அரசு ஆட்சியமைத்து 150 நாட்கள் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். இந்த 150 நாட்களும் நம்பிக்கை கொடுக்கும் நாட்களாக உள்ளன. (இடையில் ஸ்டாலினுடைய அரசு நல்ல அரசாக உள்ளதா என நெறியாளர் எழுப்பிய கேள்வி). கண்டிப்பாக, முதலமைச்சர் நாற்காலி இருக்கிறது அல்லவா, பவர் என்று சொல்வார்கள். அதன்மூலம், இவ்வளவு நல்லது செய்ய முடியும் என்றால், இவ்வளவு நாள் நமக்கு ஏன் இந்த நல்லது எல்லாம் நடக்கவில்லை என்று ஒரு கட்டத்தில் கவலையாக உள்ளது. நமக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவும் இருக்கிறது. முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்து இதையெல்லாம் செய்ய முடியும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் நிரூபித்து காட்டியிருக்கிறார்.




கேள்வி: ‘அங்காடி தெரு’ திரைப்படத்தில் வெரிகோஸ் நோய் குறித்து நீங்கள் கூறியிருப்பீர்கள்?. அப்போது இருந்த அரசு, இந்த மாதிரி சட்டத்தை கொண்டு வரும் என்று எதிர்பார்த்தீர்களா? 


பதில்: அந்தப் படத்தில் நிறைய பிரச்னைகளை நான் கோடிட்டு காட்டியிருந்தேன். கிட்டத்தட்ட 16 மணி நேர வேலை. அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத தங்குமிடம். கவனிப்பாரற்ற கிடக்கும் உணவு கூடங்கள் இதை எல்லாத்தையும் படத்தில் காண்பித்திருப்பேன். அப்போது, கருணாநிதி அவர்கள் ஆட்சியில் இருந்தார். உடனடியாக தொழிலாளர்கள் அமைப்பில் இருந்து ரங்கநாதன் தெருவிற்கு ஆய்வு செய்ய வந்தார்கள். அவர்கள் தொழிலாளர்கள் தங்கும் இடத்தை எல்லாம் ஆய்வு செய்தார்கள். ஆனால், 8 மணி நேர வேலையை உறுதி செய்தார்களா என்று எனக்கு தெரியவில்லை. அதற்கான ஆய்வும் நடைபெற்றது. இங்கு வந்து சட்டங்களுக்கு எப்போதும் பஞ்சமில்லை. 8 மணி நேரம்தான் வேலை வாங்கனும் என்று எல்லாமே இருக்கு. ஆனா, இதையெல்லாம் முறையா அமுல்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டியுள்ளது. தொடர்ந்து இந்த அரசு கவனித்து, தொழிலாளரகளுக்கான நலனை தேடினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.




கேள்வி: இத்தனை வருடங்கள் கழித்து படத்தில் காண்பித்த பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்திருப்பது ‘அங்காடி தெரு’ இயக்குநரா மகிழ்ச்சியாக உள்ளதா?


பதில்: என்ன சொல்வது, கனவு மெய்யப்பட வேண்டும் என்று பாரதியார் பாடியிருப்பார். நாம் கவிதையா ஒரு விஷயத்தை கனவு காண்கிறோம். ஆனா, அந்த கனவு மெய்ப்படும்போது, நாம் சும்மா ஒரு பொழுதுபோக்கு திரைப்படத்தை இயக்கவில்லை, உண்மையிலேயே மக்களின் பிரச்னையை பேசும்போது, பிரச்னைக்கு தீர்வு காணப்படுகிறது. எல்லோரும் ஒரு கேள்வி கேட்பார்கள். ஒரு சினிமா மூலம் ஒரு தீர்வை கொடுக்கமுடியுமா?. சமுதாய வளர்சிக்கு சினிமா என்ன செய்தது? என்று ஆயிரம் கேள்விகள் கேட்பார்கள். அன்று, நாம் எப்போதே சின்னதா ஒரு கூழாங்கல்லை நகர்த்தி வைத்தோம். அந்தக் கல் நகர்ந்து, நகர்ந்து ஏதோ ஒரு அடி மனதில் காக்கைக்கு சொட்டு தண்ணீர் கிடைத்ததுபோல, கொஞ்சம், கொஞ்சமாக நகர்ந்து ஒரு சொட்டு தண்ணீர் அவர்களுக்கு நாற்காலியாக மாறியுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. படம் என்பது வெறும் படமாக கடந்து போவது இல்லை. அதை எவ்வளவு நாம் சரியாக பயன்படுத்துகிறோம். அது ஒரு ஆயுதம் போன்றது. சரியாக பயன்படுத்தும்போது சரியாக சென்று எத்தனை வருடங்கள் ஆனாலும், அங்காடி தெரு வெளியாகி 11 வருடங்கள் ஆகிறது. இத்தனை வருடங்கள் கழித்தும் ஒரு விஷயம் நடைபெறும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒருகாட்சி நடுஇரவில் படமாக்கும்போது, ஒரு வெரிகோஸ் நோயாளி 3 நாட்களாக வேலைபார்த்தேன் என்று சொல்லும்போது வேதனையாக இருந்தது. துணிக்கடை தொழிலாளர்கள் மட்டுமில்லை, திரைப்பட தொழிலாளர்கள், உதவி இயக்குநர்கள் எல்லாருக்குமான விடிவை நோக்கிதான் இது பேசுகிறது. நாம் குறிப்பாக துணிக்கடை மட்டும் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. எல்லாருக்குமான மரியாதையை வழங்க வேண்டும்,  என்றார்.