மகளிர் சாதனைகளை படைக்க உதவ அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று அன்புமணி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களுக்கான முக்கியத்துவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிலையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
’’ஆக்கும் சக்தியான மகளிரைப் போற்றும் வகையில் உலக மகளிர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், உலகெங்கும் வாழும் மகளிருக்கு உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகம் எங்குமே பெண்கள் பலவீனமானவர்கள் என்ற பொய்யான நம்பிக்கை நிலவி வருகிறது. ஆண்களைவிட பெண்களுக்குத் தான் போர்க்குணம் அதிகம் ஆகும். வென்று விட்டதாக ஆண்கள் பெருமிதப்பட்டுக் கொண்டாலும், அவர்களின் வெற்றிக்கு பின்னணியில் இருப்பது பெண்கள் தான். சங்க காலத்திலிருந்து நிகழ் காலம் வரை இதற்கு ஏராளமான நாயகியரை உதாரணமாகக் கூற முடியும்.
பெண்களை கடவுளுக்கும் மேலாக வைத்து வழிபடும் சமுதாயம்
உலகிலேயே மகளிருக்கு மிக அதிக மரியாதை வழங்கும் சமுதாயம் தமிழ்ச் சமுதாயம். பெண்களை கடவுளுக்கும் மேலாக வைத்து வழிபடும் சமுதாயமும் தமிழ்ச் சமுதாயம் தான். மனித நாகரிகங்கள் வளரக் காரணமாகவும், வாழ்வாதாரம் மற்றும் பாசன ஆதாரமாகவும் திகழும் நதிகளுக்குக் கூட பெண்களின் பெயரை சூட்டியதிலிருந்தே மகளிரை தமிழ் சமுதாயம் எந்த அளவுக்கு மதித்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். நடைமுறை வாழ்விலும் அதே மரியாதை வழங்கப்பட வேண்டும்.
மனித வாழ்வில் பெருமை பேசப்படாத கதாநாயகர்கள் பெண்கள் தான். அவர்கள் கொண்டாடப்படவும், போற்றப்படவும், கவுரவிக்கப்படவும், முன்னோடியாக மதிக்கப்படவும் ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் அவற்றை நாம் அங்கீகரிக்கவில்லை என்பது தான் எவராலும் மறுக்க முடியாத உண்மை. குறிப்பாக குடும்பங்களில் பெண்கள் எனப்படுபவர்கள் ஊதியம் பெறாத பணியாளர்கள் என்று கருதப்படும் நிலை மாற வேண்டும். அவர்களுக்கு உரிய அங்கீகாரங்கள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும்.
சாதனை படைக்க அனுமதிக்க வேண்டும்
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்று கூறுவதே மகளிரை அடிமைப்படுத்தும் செயல் தான். ஆண்கள் தான் சாதிக்கப் பிறந்தவர்கள்; பெண்கள் அவர்களுக்கு உதவுவதற்காக பிறந்தவர்கள் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு தான் இது. பெண்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் அனைத்துத் துறைகளிலும் சாதிப்பார்கள். அதற்கு அண்மைக் காலங்களில் அவர்கள் படைத்துள்ள சாதனைகள் தான் சான்று. இதை உணர்ந்து பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதனை படைக்க அனுமதிக்க வேண்டும்; அவர்களுக்கு அனைத்து வழிகளிலும் ஆண்கள் துணை நிற்க வேண்டும் என்ற உறுதிமொழியை மகளிர் நாளான இந்த நாளில் நாம் அனைவரும் ஏற்க வேண்டும்’’.
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.