சென்னையில் முதல் கட்டமாக வண்ணாரப்பேட்டையில் இருந்து விமானநிலையம் வரை முதல் வழித்தடத்தில் (நீல வழித்தடம்) 23.085 கிலோ மீட்டர் தூரமும், சென்னை சென்டிரலில் இருந்து பரங்கிமலை வரை 21.91 கி.மீ தூரம் உள்பட 2 வழித்தடங்களில் 45.046 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.


மெட்ரோ பணிகள்:

இதை தொடர்ந்து தற்போது ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது. இந்த திட்டத்தில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்டருக்கும், மாதவரம் முதல் - சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கும் வழித்தடம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 


இதில், ஊதா வழித்தடமான மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 45.8 கி.மீ. வழித்தடத்தில் 19 உயர்நிலை பாதையும், 28 சுரங்கப்பாதையும் அமைய உள்ளது. அதன்படி  மாதவரம் பால் பண்ணையில் இருந்து  தரமணி வரை சுரங்கப்பாதையாகவும் நேரு நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து  சிறுசேரி சிப்காட் ரயில் நிலையம் வரை உயர்மட்ட பாதையாகவும் அமைகிறது. 


மக்கள் அதிர்ச்சி:


இதனை தொடர்ந்து கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் செயல்பட தொடங்கியதால், விமானநிலையம்,  கிளாம்பாக்கம் மற்றும் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் பூந்தமல்லி பரந்தூர் மற்றும் கோயம்பேடு- ஆவடிக்கு 2 ஆம் கட்ட விரிவாக்கப் பணிகளை செய்ய முடிவு செய்யப்பட்டு இருந்தது.


இதற்கான திட்ட பணிகள் நடைபெற்று வந்த நிலையில், மக்கள் கூட்டம் எதிர்ப்பார்த்த அளவு வராது என்று கருதப்பட்டதால் இந்த திட்டம் கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அதேநேரம், கோயம்பேடு-ஆவடி, பூந்தமல்லி- பரந்தூர் இடையே அலுவலக நேரங்களை கணக்கீடு செய்யப்பட்டதில், பயணிகள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது. இந்த திட்டம் கைவிடப்படுவது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மாற்றுப்பாதை:


சிறுசேரியில் 50க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இருப்பதால் அவற்றில் பணியாற்றும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறுசேரியில் இருந்து கிளாம்பாக்கம் செல்ல மெட்ரோ ரயிலை பயன்படுத்துவார்கள்.


அப்பகுதி மக்களின் கோரிக்கை  முன்னிட்டு கேளம்பாக்கம் , திருப்போரூர் வழியாக மாற்றுப்பாதையில் செயல்படுத்துவது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இது தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ முடிவும் எடுக்கப்படவில்லை என மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.