பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குச் செல்ல வேண்டும் என்றால் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி இந்த தொடரில் களமிறங்கியது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோற்றது.
1000 ரன்களை கடந்த ஹெட்:
இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த வரும் ஆஸ்திரேலிய அணி 75 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, டிராவிஸ் ஹெட் – ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்தனர். சமீபகாலமாகவே, இந்திய அணிக்கு எதிராக மிகப்பெரிய தலைவலியாக இருப்பவர் டிராவிஸ் ஹெட்.
அவர் இந்த போட்டியில் இதுவரை முதல் இன்னிங்சில் 70 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார். இந்த போட்டியில் சிறப்பாக ஆடி வரும் ஹெட் புதிய வரலாறு ஒன்றும் படைத்துள்ளார். இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 1000 ரன்களை கடந்துள்ளார். இந்த போட்டி தொடங்கும் முன்பு இந்திய அணிக்கு எதிராக அவர் 13 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 955 ரன்களை எடுத்திருந்தார். இந்த போட்டியின் 45 ரன்களை எட்டியபோது அவர் 1000 ரன்களை எட்டினார்.
இந்தியாவிற்கு தலைவலி:
டிராவிஸ் ஹெட் இதுவரை இதுவரை 52 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 8 சதங்கள், 17 அரைசதங்களுடன் 3 ஆயிரத்து 413 ரன்கள் எடுத்துள்ளார். 30 வயதான டிராவிஸ் ஹெட் இதுவரை எந்த அணிக்கு எதிராகவும் டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்களை கடந்தது இல்லை. இங்கிலாந்து அணிக்கு எதிராக 13 போட்டிகளில் ஆடி 910 ரன்களை இந்தியாவிற்கு அடுத்தபடியாக ஒரு அணிக்கு எதிராக எடுத்துள்ளார். அதேசமயம், பாகிஸ்தான் அணி டிராவிஸ் ஹெட்டை நன்றாக கையாண்டுள்ளனர். பாகிஸ்தானுக்கு எதிராக 10 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 295 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 2 முறை டக் அவுட்டாகியுள்ளார்.
ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணிக்கு எதிராக 9 போட்டிகளில் ஆடி 345 ரன்கள் எடுத்துள்ளார். குறிப்பாக, உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு எதிராக சதம் அடித்து இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக டிராவிஸ் ஹெட் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டிராவிஸ் ஹெட் இந்திய அணிக்கு எதிராக தன்னுடைய கடைசி 7 இன்னிங்சில் மட்டும் 90 ரன்கள், 163 ரன்கள், 18 ரன்கள், 11 ரன்கள், 89 ரன்கள் மற்றும் 140 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்திய அணிக்க முக்கியமான போட்டிகளில் தலைவலியாக உருவெடுத்துள்ள டிராவிஸ் ஹெட்டை அவுட்டாக்க இந்திய வீரர்கள் போராடி வருகின்றனர்.