தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை அதிகரித்து வருவதாகவும், தீவிரத்தன்மையைக் குறைக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் ஓரளவு குறைந்து வரும் நிலையில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மழைக் காலமும் தொடங்கிவிட்ட நிலையில், இது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 


அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு


2022ஆம் ஆண்டில் ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை 2,915 பேர் மட்டுமே டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், அதற்குப் பிறகு ஆகஸ்ட் மாதம் 481, செப்டம்பர் மாதம் 572 என பாதிப்பு எண்ணிக்கை மளமளவென அதிகரித்து வருகிறது. 


அக்டோபர் மாத இறுதியில் வட கிழக்குப் பருவமழை தொடங்கிய பிறகு, டெங்கு காய்ச்சலின் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று பொதுமக்கள் இடையே பீதி ஏற்பட்டுள்ளது. 


இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் செய்தியாளர்களிடம் பேசியதாவது: 


''மழை பெய்யத் தொடங்கியுள்ளதால், சுத்தமான நீரில் உற்பத்தியாகும் ஏடிஸ் கொசுக்களின் பெருக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால், மழை முடியும் வரை இன்னும் சில மாதங்களுக்கு டெங்கு பாதிப்பு அதிகமாக இருக்கும்.


டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து, செயல்பட்டு வருகிறோம். காய்ச்சலின் தீவிரத்தைக் குறைக்க, தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேவையான இடங்களில் மருத்துவ முகாம் நடத்துமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 


டெங்கு சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் அரசிடம் உள்ளன. திறந்த வெளியில் உள்ள சிமென்ட் தொட்டி, தண்ணீர்த் தொட்டி, ஆட்டுக்கல், உடைந்த மட்பாண்டங்கள், பிளாஸ்டிக் கப், தட்டு, தேங்காய் ஓடு, வாளி, டயர் ஆகியவற்றில் மழைநீர், தண்ணீர் தேங்கினால், அவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகும். எனவே, அதுபோன்ற பொருட்கள் மற்றும் குவிந்து கிடக்கும் கட்டுமானப் பொருட்களை அகற்ற வேண்டும்''. 


இவ்வாறு  பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்தார்.




பள்ளிகளிலும் காய்ச்சல் முகாம்


முன்னதாக செய்தியாளர்களிடம் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, ''தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மழைக்காலம் முடியும் வரை காய்ச்சல் முகாம் தொடர்ந்து நடைபெறும். பள்ளிகளிலும் தொடர்ந்து காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. இதுவரை 18 லட்சம் பேர் முகாம்களில் பயனடைந்துள்ளனர்'' என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


பருவ மழைக் காலத்தில் கொசு மருந்து அடிப்பது, அவற்றை விநியோகிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் 19 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.