மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆதீனகுரு முதல்வரின் குருபூஜை தினத்தன்று பட்டணப் பிரவேசம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு அதில் ஆதீன கர்த்தரை பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து வீதியுலா செல்வது வழக்கம்.
இந்த சூழலில் மனிதனை மனிதன் சுமக்கும் இந்த பட்டினப்பிரவேசம் பல்லக்குத் தூக்கும் நிகழ்வுக்கு திராவிடர் கழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த ஆண்டு திருவாவடுதுறை ஆதீனத்தில் நடைபெற்ற பட்டினப் பிரவேசம் நிகழ்வில் திராவிடர் கழகத்தினரின் கடும் எதிர்ப்பை தெரிவித்து ஆதின வாயில் முன்பு ஏராளமான திராவிடர் கழகத்தினர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அங்கு காவல்துறை குவிக்கப்பட்டு, போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து பின்னர் கடும் எதிப்பையும் மீறி திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் பல்லக்கில் அமர்த்தி வீதியுலா செல்லும் நிகழ்வு நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில், தருமபுரம் ஆதீனத்தில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் பட்டினப் பிரவேச நிகழ்வானது இம்மாத 22 தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பையடுத்து, தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டணப் பிரவேச நிகழ்வில் ஆதீனகர்த்தரை பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து செல்ல தடைவிதித்து மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் ஜெ.பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.
ஆதீனகர்த்தரை பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் தூக்கினால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் வசந்த ராஜ் இந்நிகழ்ச்சியை தடை செய்திட கோரி அனுப்பிய அறிக்கையின் படியும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 23 இன்படி சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதாலும், பட்டணப் பிரவேச நிகழ்வில் ஆதினகர்த்தரை பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் தூக்கி செல்ல தடை விதித்து கோட்டாட்சியர் பாலாஜி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். தொடர்ந்து பலதரப்பட்ட ஆதரவுகள் எதிர்ப்புகளுக்கும் மத்தியில், மீண்டும் பழமை மாறாமல் பட்டினப் பிரவேசம் நிகழ்வை நடத்த அரசு அனுமதி வழங்கியது. அதனைத் தொடர்ந்து பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறும் வைகாசி பெருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று தருமபுரம் ஆதினத்தில் நடைபெற்று.
தருமபுரம் ஆதீனத்தில் 11 நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான 18 ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும், 20 ஆம் தேதி திருத்தேர் உத்ஸவமும், 21 ஆம் தேதி காலை காவிரியில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. 22 ஆம் தேதி தருமபுரம் ஆதீனம் 27 வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சிவிகை பல்லக்கில் பட்டினப் பிரவேசம் மேற்கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்குவார். இப்பெருவிழாவின் கொடியேற்றம் ஞானபுரீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றது. கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தருமபுர ஆதீனகர்த்தர் முன்னிலையில் திருவிழாவின் ரிஷபக்கொடி ஏற்றப்பட்டது. பாரம்பரியமாக நடந்து வரும் பட்டினப் பிரவேச விழாவை நடத்த நிகழாண்டில் விதிக்கப்பட்ட தடை பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து இவ்விழா முக்கியத்துவம் பெற்றுள்ளது.