சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், விழுப்புரம், கடலூர், ரணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.


சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த மூன்று தினங்களுக்கு கனமழை தொடரும் என்றார். மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், விழுப்புரம், கடலூர், ரணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரிடங்களில் கன மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளார்.


அதிகபட்ச மழை:


தொடர்ந்து பேசிய அவர், ” தென்கிழக்கு வங்கக்கடலில் தென் பகுதியில் இருந்து காற்று வட பகுதி நோக்கி நகர்கிறது இதன் காரணமாக மேலெடுக்க சுழற்சி என்பது உருவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மீனம்பாக்கத்தில் அதிகப்படியாக 16 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பாக, மீனம்பாக்கத்தில் இன்று பெய்துள்ள மழை அளவு கடந்த 73 ஆண்டுகளுக்கு பிறகு பதிவான இரண்டாவது அதிகபட்ச மழை அளவு, இதற்கு முன் 1996 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி -  282.2 மி.மீ மழை பெய்துள்ளது அதனை தொடர்ந்து அதிகபட்ச மழையாக இன்று - 158.2 மி.மீ பதிவாகியுள்ளது” என்றார்.


அதேபோல, நுங்கம்பாக்கத்தில் இன்று 84.7 மி.மீ மழை பதிவாகியுள்ளது, 73 ஆண்டுகளுக்கு பிறகு பதிவான மழை அளவில் மூன்றாவது அதிகபட்ச மழை ஆகும். இதற்கு முன்பு 1996 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் - 347.9 மி.மீ மழையும், 1991 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 191.9 மி.மீ மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை :


குமரிக்கடல் தென்மேற்கு வங்க கடல் மற்றும் மத்தியமேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 - 55 கி.மீ வேகத்தில் வீசுக்கூடும்.  அடுத்த இரண்டு தினங்களுக்கு இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.


மேலும், ஜூன் 1 ஆம் தேதி முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் சராசரி இயல்பான மழை அளவு 34.4 மி.மீ ஆனால் பதிவான மழை அளவு  30.5 மி.மீ இது இயல்பை விட 11% குறைவு என தெரிவித்தார். .