தென்தமிழக  பகுதிகளின்  மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.  இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில், சென்னை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யகூடும்  என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

தமிழ்நாட்டில் மே மாதம் தொடக்கத்தில் இருந்து ஒரு சில மாவட்டங்களில் கனமழை பதிவாகி வந்தது. ஆனால் வங்கக்கடலில் ரீமல் புயல் உருவானது முதல் தமிழ்நாட்டில் அனேக இடங்களில் வெப்பநிலை அதிகபட்சமாக பதிவாகி வருகிறது. அதிகபட்சமாக 42 டிகிரி செல்சியஸ் கடந்து பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை 40 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவாகி வருவதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளிலும், சுற்றுவட்டார பகுதிகளில் அனேக இடங்களில் லேசான முதல் மிதமான மழை பதிவாகி வருகிறது. நேற்று இரவு சென்னை மடிப்பாக்கம். ஆலந்தூர், ஆதம்பாக்கம், ஜமீன் பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. சூளைமேடு, கோடம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் லேசான சாரல் மழை பதிவாகியுள்ளது. அதேபோல் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

Continues below advertisement

மேலும், இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில்  ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் லேசான  மழை பெய்ய வாய்ப்புள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.