தமிழகத்தில் பெட்ரோல் - டீசல் விலை உயர்வு மற்றும் வர்த்தக கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு எதிரொலியாக அத்தியாவாசிய பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில்  கடைகளில் டீ - காபி விலை உயர்ந்தது. டீ விலை ரூ.2-ம், காபி விலை ரூ.3-ம் உயர்ந்திருக்கிறது. இதையடுத்து ஓட்டல்களில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகளிலும் இந்த விலையேற்றம் அமல்படுத்தபட  இருக்கிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் வந்துள்ளன.


இதுகுறித்து தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் எம்.வெங்கடசுப்பு கூறியபோது, சென்னையில் வர்த்தக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.268 உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.2 ஆயிரத்து 253-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் சிரமம் ஏற்பட்ட நிலையில், இந்த கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு எங்களை மிகவும் யோசிக்க வைத்துள்ளது. வர்த்தக கியாஸ் சிலிண்டர் இல்லாமல் சமையலே இல்லை எனும் சூழலில். மேலும் ஏராளமான செலவை நாங்கள் சந்திக்க வேண்டியுள்ளது. இதற்கிடையில் சொத்துவரியை எக்கச்சக்கமாக உயர்த்தி இருக்கிறார்கள். இது எங்களுக்கு இன்னும் வேதனையையும், சிரமத்தையும் அளித்துள்ளது. எனவே இச்சூழலில் ஓட்டல்களில் உணவு வகைகளின் விலையை அதிகரிப்பதை விட எங்களுக்கு வேறு வழி கிடையாது என்றார்.




தமிழகத்தில் சொத்துவரி அதிகரித்ததை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் உணவு வகைகளின் விலையை உயர்த்த ஓட்டல் உரிமையாளர்கள் தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம். மக்களுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல், அதேவேளை எங்கள் தொழிலும் பாதிக்காதவாறு எந்தெந்த உணவு வகைகளில் எவ்வளவு விலையேற்றம் செய்யலாம்? என்று யோசித்துக்கொண்டு இருக்கிறோம். விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்றார். அதேவேளை சொத்துவரி உயர்வை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக அரசை வேண்டி கேட்டுக்கொள்கிறோம். இப்போது உயர்த்தப்பட்ட அளவில் 50 சதவீதத்தை, அதாவது பாதியாக இந்த வரி அதிகரிப்பை குறைக்க வேண்டும். இது எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றும். எனவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.



இதனை தொடர்ந்து சிறிய ஓட்டல்களில் உணவுகளின் விலையை ரூ.3 முதல் ரூ.5 வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், பெரிய ஓட்டல்களில் ரூ.10 முதல் ரூ.20 வரை விலை உயர்வு இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சாலையோர மற்றும் தள்ளுவண்டி உணவகங்களிலும் ரூ.2 முதல் ரூ.3 வரை விலை உயர்வு இருக்கலாம் என்றும், குறிப்பாக இட்லி ரூ.1 அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே காய்கறி - பழ வகைகள் உயரலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது ஓட்டல்களில் உணவு வகைகளின் விலையும் அதிகரிக்க இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் மக்கள் அண்றாடம் பயன்படுத்தும் அத்தியாவாசிய பொருட்களின் விலைகள் சற்று உயர்ந்துள்ளது. இந்நிலையில் உணவு வகைகளிலும் விலை உயர வாய்ப்பு இருப்பதால்  பொதுமக்களை மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.