காவிரி ஆற்றில் மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 20,000 கனஅடியாக சரிந்தது. மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு 27 ஆயிரத்து, 978 கன அடி தண்ணீர் வந்தது. காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு, 20 ஆயிரத்து, 650 கன அடியாக நீர் வரத்து குறைந்தது. டெல்டா பாசன பகுதி சாகுபடி பணிக்காக, காவேரி ஆற்றில் 19 ஆயிரத்து,130 தண்ணீரும் நான்கு பாசன வாய்க்கால்களில் 1,520 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர் நகரப் பகுதி, அரவக்குறிச்சி பகுதி, அணைப் பாளையம் பகுதி, க.பரமத்தி பகுதி, குளித்தலை பகுதி, தோகைமலை பகுதி, கே.ஆர்.புரம் பகுதி, மாயனூர் பகுதி, பஞ்சப்பட்டி பகுதி, கடவூர் பகுதி, பாலவிடுதி பகுதி, மயிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை வரை மழை அளவு பதிவாகவில்லை. கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
அமராவதி அணையின் நீர்மட்டம்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு, 350 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 200 கன அடி தண்ணீரும் புதிய பாசன வாய்க்கால்களில் 440 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 82.32 அடியாக இருந்தது. கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு காலை நிலவரப்படி வினாடிக்கு, 374 கன அடி தண்ணீர் வந்தது.
நங்காஞ்சி அணையின் நீர்மட்டம்.
திண்டுக்கல் மாவட்டம் நங்காஞ்சி அணைக்கு வடகாடு மலைப்பகுதிகளில், மழை காரணமாக காலை ஆறு மணி நிலவரப்படி வினாடிக்கு 6 கன அடி தண்ணீர் வந்தது. 39.37 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 33.23 அடியாக இருந்தது.
ஆத்துப்பாளையம் அணையின் நீர்மட்டம்.
கரூர் மாவட்டம் க. பரமத்தி அருகே, கார்வழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை 6 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 23.97 அடியாக இருந்தது. அணையில் இருந்து, நொய்யல் ஆற்றில் தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தால் தான், அதனை சுற்றியுள்ள நிலம், பாசன வாய்க்கால்கள் மற்றும் குளங்கள், ஏரிகள், வீடுகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கும். இல்லையென்றால், தண்ணீர் பற்றாக்குறையால் பகுதி மக்கள் சிரமம் அடைவர் என்று கூறினார்கள்.
கரூர் மாவட்டத்தில் மழையின் நிலவரம்.
கரூர் மாவட்டத்தில் காலை 8 மணி வரை, கடந்த 24 மணி நேரத்தில் மழை இல்லை. மழை இல்லாததால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர். கடந்த வாரத்தில் அதிகமான மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால், இப்பொழுது பாசனத்திற்கு மழை இல்லாததால் வருத்தத்தில் உள்ளனர்.
மேகமூட்டத்துடன் வானம் கரூரில் இதமான சீதோஷ்ண நிலை.
இன்று முதல் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதை முன்னிட்டு, அதனை வலியுறுத்தும் வகையில் கரூர் மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29ஆம் தேதி முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை போன்ற பல்வேறு காரணங்களால் கரூர் மாவட்டம் முழுவதும் அக்டோபர் மாதத்தில் ஓரளவு மழை பெய்துள்ளது.
இந்நிலையில், முறைப்படி வடகிழக்கு பருவமழை இன்று துவங்க உள்ள நிலையில், இதனை பறைசாற்றும் வகையில், கரூர் மாவட்டம் முழுவதும் காலை முதல் வெயிலின் தாக்கம் குறைந்து மேகம் ஓட்டத்துடன் காணப்பட்டதோடு, இதமான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் இந்த மூன்று மாதங்களில் கரூர் மாவட்டம் அதிக அளவு மழை பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் மக்களும், விவசாயிகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.