வாங்கக் கடலில் புயல் சின்னம் நிலைகொண்டுள்ள நிலையில், தற்போது உருவாகும் புயலுக்கு மோன்தா என பெயர் சூப்படப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த புயல் சின்னம் சென்னைக்கு 890 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளதாகவும், படிப்படியாக அது வலுவடைந்து புயலாக மாறி, 28-ம் தேதி கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழ்நாட்டிற்கான மழை குறித்து என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை தற்போது பார்க்கலாம்.
சென்னைக்கு 950 கி.மீ தூரத்தில் புயல் சின்னம்
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நேற்று(24-10-2025) காலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, மாலை 5:30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அதே பகுதிகளில் நிலவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அது இன்று(25-10-2025) காலை ௦5:30 மணியளவில், மேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, ௦8:30 மணியளவில் அதே பகுதிகளில், அந்தமான் தீவுகளின் போர்ட் ப்ளேயரிலிருந்து மேற்கு-தென்மேற்கு திசையில், சுமார் 380 கிலோ மீட்டர் தொலைவிலும், விசாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 910 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே 890 கிலோ மீட்டர் தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தென்கிழக்கே 930 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 26-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், தொடர்ந்து 27-ம் தேதி காலை, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுவடைந்து, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 28-ம் தேதி வாக்கில் தீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர கடலோரப்பகுதிகளில், மசூலிப்பட்டினம்-கலிங்கப்பட்டினத்திற்கு இடையே, காக்கிநாடாவிற்கு அருகில், தீவிரப் புயலாக 28-ம் தேதி மாலை அல்லது இரவு நேரத்தில் கடக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், அந்த சமயத்தில், காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 110 கிலோ மீட்டர் வரையிலான வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு
இதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், இந்த புயல் சின்னம் 7 கி.மீ. வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் அதன் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.