தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக அடுத்தடுத்து புயல் சின்னங்கள் உருவாகி வருகிறது.தற்போது தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழையானது வெளுத்து வாங்கி வருகிறது. இன்னும் அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கு ஏற்றார் போல் வங்க கடலில் புதிய புயல் உருவாகவுள்ளது. இதற்கு சின்யார் என பெயரிடப்படவுள்ளது. 

Continues below advertisement


இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய் வெளியிட்டுள்ள அறிக்கையில், மலாக்கா ஜலசந்தி, அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய குறைந்த காற்றழுத்த பகுதி, இன்று 24 நவம்பர் 2025,அதே பகுதியில் தொடர்ந்து நீடித்து வருகிறது.  இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்குப் வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வாய்ப்புள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்தும் நகர்ந்து, அடுத்த 48 மணி நேரங்களில் தென்கிழக்குப் வங்கக் கடல் பகுதியில் ஒரு புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதே நேரம் நேற்று குமரி  மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் நிலவிய மேல்-காற்று சுழற்சி, இன்று 24 நவம்பர் 2025, காலை அதே பகுதியில் தொடர்ந்தும் நீடிக்கிறது. நாளை (நவம்பர் 25ஆம் தேதி)  குமரி மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் ஒரு  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்தடுத்து உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.