வடகிழக்கு பருவமழை தீவிரம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் தொடங்கியுள்ளது. அந்த வகையில் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழையால் அடுத்தடுத்து புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனையடுத்து கடந்த 10 நாட்களாக மழை வாய்ப்பு குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் வங்க கடலில் இரண்டு புயல் சின்னங்கள் உருவாகியுள்ளது.
வங்க கடலில் உருவாகிறது `சென்யார்’ புயல்
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வருகிற நவம்பர் 26ம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நேற்று தெற்கு அந்தமான் பகுதியில் உருவான காற்று சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. நாளை காற்றழுத்த தாழ்வு தாழ்வு மண்டலமாகவும் இதனை தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தற்போது அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நவம்பர் 26ஆம் தேதி தென் கிழக்கு வங்க கடலில் புயலாக உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு புயல் உருவாகும் பட்சத்தில் `சென்யார்’ என பெயரிடப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. `சென்யார்’ என்றால் அரபு மொழியில் `சிங்கம்’ என பொருள் என கூறப்படுகிறது. எனவே வங்க கடலில் உருவாகவுள்ள இந்த சிங்கம் புயல் தமிழகத்தை தாக்குமா.? எந்த இடத்தில் தாக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே அடுத்த ஓரிரு நாட்களில் தெளிவான முடிவு கிடைக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்திற்கு அலர்ட்
இந்த நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரிக்கடலில் நிலவும் காற்றுச்சுழற்சி அத்துடன் இணைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என எதிர்பபார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இலங்கை காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுவடைந்து தமிழக கடற்கரை நோக்கி இம்மாத இறுதியில் தமிழகத்தை அடைய இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
தென் தமிழகத்தில் மழை எச்சரிக்கை
அதே நேரத்தில் அந்தமானுக்கு கிழக்கே நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற வாய்ப்புகள் இல்லையெனவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இன்றும் (23.11.2025) மற்றும் நாளையும் (24.11.2025) தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் நான்காம் சுற்று மழை தீவிரமடையும் எனவும்,
குறிப்பாக தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மற்றும் உள் மாவட்டங்களில் பரவலாக கனமழை எதிர்ப்பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.
தென் மாவட்டங்களின் ஒரிரு இடங்களில் மிககனமழை முதல் அதித கனமழையும். காவிரி டெல்டா மாவட்டங்களில் கன முதல் மிககனமழை பதிவாகும்.
உள் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் பிற்பகல் மற்றும் மாலை நேரத்திலும் சென்னை உள்ளிட்ட புற மாவட்டங்களிலும் விட்டு விட்டு மழை எதிர்பபர்க்கலாம் என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.