வங்கக் கடலில் புயல் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புதிதாக உருவாகியுள்ள அந்த புயலுக்கு ஏமன் நாடு பரிந்துரைத்த டிட்வா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த டிட்வா புயல், வரும் 30-ம் தேதி சென்னைக்கு அருகே கரையை ஒட்டி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது டிட்வா புயல் சென்னைக்கு 700 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், காவிரிப் படுகை, வட தமிழக கடலோர மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

‘டிட்வா‘ புயல் குறித்து வானிலை ஆய்வு மையம் அறிக்கை

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடற்கரையில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, சூறாவளி புயலாக (டிட்வா) தீவிரமடைந்து, இன்று, நவம்பர் 27, 2025 அன்று காலை 11.30 மணிக்கு அதே பகுதியில் பொத்துவில் இலங்கைக்கு கிழக்கே நெருக்கமாகவும், மட்டக்களப்பிலிருந்து(இலங்கை) 90 கிலோ மீட்டர் தென்கிழக்கே, ஹம்பாந்தோட்டைக்கு (இலங்கை) வடகிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும், திருகோணமலைக்கு (இலங்கை) தென்கிழக்கே 200 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 610 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 700 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டது.

இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு நோக்கி தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடற்கரை வழியாக நகர்ந்து, நவம்பர் 30-ம் தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அப்பால் தென்மேற்கு வங்காள விரிகுடாவை அடையும் என்று வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Continues below advertisement