இளையராஜா விவகாரத்தில் கி. வீரமணி, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை காவல்துறைக்கு தேசிய எஸ்.சி, எஸ்.டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பட்டியலின சமூகம் குறித்து இழிவாக பேசியதாக வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய எஸ்.சி, எஸ்.டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 


முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைபடுவார் என இசைஞானி இளையராஜா எழுதிய முன்னுரை வரிகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் சமூகவலைதளங்களில் பேசுபொருளானது. மேலும், ஒரு சிலர் இளையராஜா மத்திய அரசு வழங்கும் எம்.பி பதவிக்கு ஆசைப்பட்டுதான் அம்பேத்கரையும், மோடியையும் ஒன்றாக இணைத்து பேசினார் என்று கருத்து தெரிவித்து வந்தனர். பலர் இளையராஜாவின் சொந்த கருத்தை விமர்சிக்க ஒருவருக்கும் உரிமையில்லை. இது கருத்துரிமைக்கு எதிரான அச்சுறுத்தல் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


இந்தநிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஈரோட்டில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தலைமையில் நீட் தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கலந்துகொண்டு பேசினார். அதில், ''பணம் வந்துவிட்டால் நீங்கள் உயர்ந்த சாதி ஆகிவிட முடியாது. தமிழகத்தில் சில அகராதிகள் இருக்கிறார்கள். கேட்டால் உண்மையிலேயே நான் இசை மன்னன் எனச் சொல்லி கொள்கிறார்கள். இசை மன்னன் யார் என்று எல்லோருக்கும் தெரியும். தபேலா எடுத்து அடிக்கிறவர்கள் எல்லாம் இசையமைப்பாளராக ஆகிவிட முடியாது.


வறுமையில் சாப்பாட்டுக்கே வழி இல்லாதபோது கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டவர்கள், பணமும் புகழும் வந்த பிறகு தன்னை உயர் சாதி என நினைத்துக் கொள்வது என்ன நியாயம்? நான் யாரைச் சொல்கிறேன் என உங்களுக்கு தெரிந்திருக்கும். வயது 80க்கு மேல் ஆகிறது. இளையராஜா பக்திமான் ஆவது உங்கள் விருப்பம். அதை நான் தவறென்று கூற மாட்டேன். அம்பேத்கர் போன்றவர்களுடன் மோடியை ஒப்பிடுவது என்ன நியாயம்?" என்று தெரிவித்தார். 


ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அப்பொழுது பேசிய பேச்சுக்கு, திராவிட கழக தலைவர் வீரமணி கைதட்டி சிரித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வுக்கு பிறகு ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் வீரமணி எதிராக பா. ரஞ்சித், மூடர் கூடம் இயக்குநர் நவீன் குமார் கருத்துகள் தெரிவித்தனர். 


இந்தநிலையில், இளையராஜா விவகாரத்தில் கி. வீரமணி, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை காவல்துறைக்கு தேசிய எஸ்.சி, எஸ்.டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பட்டியலின சமூகம் குறித்து இழிவாக பேசியதாக வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய எஸ்.சி, எஸ்.டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண