CM Stalin: விரைந்து செயல்பட வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர்  ஸ்டாலின் பேசியுள்ளார்.


மாவட்ட செயலாளர்கள் கூட்டம்:


திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று முடிந்தது.  திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் மக்களவை தேர்தல் பணிகள், மாவட்ட வாரியாக பணிகள், பூத் கமிட்டி புதுப்பிப்பது,  தேர்தலில் திமுக வேட்பாளர்களை எங்கே களமிறக்குவது, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது உள்ளிட்ட பல விஷயங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக  தகவல் வெளியாகி உள்ளது. 


பின்னர், இக்கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், ”விரைந்து செயல்பட வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம். அதனால்தான் உடனடியாக காணொலி வாயிலாக கூட்டம் நடத்தப்பட்டது. நம்மை எதிர்நோக்கி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புதுவை உள்ளிட்ட நாற்பது தொகுதியிலும் நாம் வெற்றி பெற வேண்டும். தமிழ்நாட்டில் அடைவது போன்ற வெற்றியை இந்தியா முழுமைக்கும் அடைய வேண்டும் என்பதற்காகத்தான் இந்தியா கூட்டணியை அமைத்துள்ளோம். அகில இந்தியக் கட்சிகளும் பல்வேறு மாநிலங்களை ஆளும் கட்சிகளும் - வலுவான மாநிலக் கட்சிகளும் - இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. பாரதிய ஜனதா கட்சி ஒன்றியத்தில் ஆட்சி அமைக்க முடியாது; இந்தியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்ற கருத்து பரவலாக ஏற்பட்டு விட்டது. எனவே, இந்த நேரத்தில் நமது பொறுப்பும் கடமையும் அதிகமாகி உள்ளது.


"வேட்பாளர் தோற்றால் மாவட்ட செயலாளர் பதவிநீக்கம்”


நாடாளுமன்றத் தேர்தல் பணியை கடந்த ஆறு மாதத்துக்கு முன்பே நாம் தொடங்கினோம். நமது  வெற்றிக்கு அடித்தளமாக விளங்கக்கூடிய வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை நியமித்தோம். இதுவரையில் அவர்களுக்கான மூன்று பயிற்சிபாசறைக் கூட்டங்கள், தேர்தல் சிறப்பு மாநாடுகளைப் போல நடந்துள்ளன. அடுத்ததாக வடக்கு மண்டல பயிற்சி பாசறைக் கூட்டம் திருவண்ணாமலையிலும், சென்னை மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டமும் நடைபெறவுள்ளது. இந்தப் பயிற்சி பாசறைக் கூட்டங்களில் நாம் எடுத்துச் சொன்னதைச் செயல்படுத்தினாலே போதும். முழுமையான வெற்றியை நாம் அடைந்து விடலாம்” என்றார்.


மேலும், "தொகுதி பார்வையாளர்களுக்கு சரியாக ஒத்துழைக்காத மாவட்ட செயலாளர்கள் மாற்றப்படுவீர்கள். தேர்தல் பணியில் தொய்விருந்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன். மூத்த நிர்வாகி, அமைச்சர் என யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டேன். திமுக கூட்டணியின் வேட்பாளர் தோல்வி அடைந்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பேன். சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கிய தொகுதிக்கு வாரம் ஒரு முறை செல்ல வேண்டும். தேர்தல் பொறுப்பாளர்கள் சட்டமன்ற தொகுதிக்குச் சென்று  நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துங்கள்.


மக்கள் நன்றாக இருக்கிறார்கள். அதனை வாக்குகளாக மாற்றுவதற்கு உழையுங்கள். உழைப்பும் செயல்பாடும்தான் வெற்றியைப் பெற்றுத் தரும். திட்டமிட்டு உழையுங்கள். தி.மு.க. கூட்டணி அனைத்துத் தொகுதியிலும் வெற்றி பெற உழையுங்கள்” என்றார் ஸ்டாலின்.