அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை பாஜகவுக்கு விற்று விடுவார்கள் ; உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை!
பாஜக என்ன திட்டத்தை கொண்டு வந்தாலும் அதற்கு ஆமாம் சாமி போடுவதிலேயே அதிமுகவினர் குறியாக உள்ளனர் - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

விழுப்புரம் : பாஜக மதத்தை வைத்து தமிழ்நாட்டில் கால் வைக்க முயற்சி செய்கிறது. அதிமுகவினர் அமித்ஷாவின் அடிகளாக மாறிவிட்டார்கள். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை பாஜகவுக்கு விற்று விடுவார்கள் என சிந்தாமணியில் கலைஞர் சிலையை திறந்து வைத்து உதயநிதி ஸ்டாலின் பேச்சு.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள சிந்தாமணியில் மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் 8 அடி உயர வெண்கல சிலையை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். திறப்பு விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடி. திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
கலைஞரில் சிந்தனையால் தமிழ்நாடு மதச்சார்பற்ற, முற்போக்கான மாநிலமாக உள்ளது. திருப்பரங்குன்றத்தில் என்ன நடக்கொண்டிருக்கிறது என்பதை தமிழக மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒன்றிய பாஜக அரசு மதத்தை வைத்து தமிழ்நாட்டிற்குள் எப்படியாவது கால் வைத்துவிடலாமா என முயற்சி செய்துக்கொண்டிருக்கிறார்கள். திமுகவின் கடைசி தொண்டன் இருக்கும்வரை சங்கி கூட்டத்தை தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம். தமிழ்நாட்டு மக்களும் அனுமதிக்க மாட்டார்கள்.
திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்கள் கொடுத்து தமிழ்நாட்டை இந்தியாவின் முதல் மாநிலமாக மாற்றியுள்ளோம். காலை உணவு திட்டத்தில் 25 லட்சம் மாணவர்கள் தினமும் பயன்பெற்று வருகிறார்கள். புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டம். அரசு பள்ளி மாணவர்கள் உயர்க்கல்வி பயில மாதம் ஆயிரம் வழங்கப்படுகிறது. மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 27 மாதங்களில் ஒருகோடியே பதினைந்து லட்சம் மகளிருக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படுகிறது. விடுபட்ட மகளிர்க்கு டிசம்பர் 12 ஆம் தேதி முதல் வழங்கப்படும். தமிழ்நாடு மக்கள் அடுத்த தேர்தலிலும் வெற்றிவாய்பை தர தயாராக உள்ளனர். அடுத்த மூன்று மாதங்களில் தேர்தல் வரவுள்ளது.
வரும் தேர்தலில் மீண்டும் அதிமுகவை தமிழ்நாட்டில் அனுமதித்தால், கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டை அதிமுக பாஜகவுக்கு வாடகை விட்டிருந்தார்கள். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை பாஜகவுக்கு விற்றுவிடுவார்கள். பாஜகவின் அடிமையாக அதிமுக செயல்பட்டு வருகிறது. பாஜக என்ன திட்டத்தை கொண்டு வந்தாலும் அதற்கு ஆமாம் சாமி போடுவதிலேயே அதிமுகவினர் குறியாக உள்ளனர். எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக என்பதை மறந்து அமித்ஷா திராவிட முன்னேற்ற கழகமாக மாறியுள்ளது. அமித்ஷாவின் அடிமைகளாக அதிமுகவினர் மாறிவிட்டார்கள். இதற்கெல்லாம் சரியான பதில் தரும் நேரம் தான் வருகின்ற சட்டமன்ற தேர்தல். அடுத்த மூன்று மாதங்கள் அரசின் திட்டங்களை, கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.





















