முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு, ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கோழிகமுத்தி யானைகள் முகாம்கள் நாட்டிலேயே பழமையான முகாம்கள் ஆகும். முதுமலை யானைகள் முகாமில் தற்போது 28 யானைகள், 22 பாகன்கள் , 12 உதவியாளர்கள், 21 ஒப்பந்த பணியாளர்கள் உள்ளனர். அங்குள்ள யானைகளை பராமரிக்கவும், அவற்றுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தரவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதுமலை புலிகள் காப்பகத்தைச் சேர்ந்த தலா 3 பாகன்கள், உதவியாளர்கள் ஆகியோருடன் ஒரு வனச்சரக அலுவலர், கால்நடை ஆய்வாளர் ஆகியோரை தாய்லாந்துக்கு அனுப்பி, யானைகளை பராமரிப்பது தொடர்பான பயிற்சி அனுப்பவும் அரசு முடிவு செய்துள்ளது.
இதனிடையே, ஒவ்வொரு யானையின் உடல்நலமும் அவ்வப்போது பரிசோதிக்கப்பட்டு, அவற்றின் உடல்நிலைக்கு ஏற்ப ஆரோக்கியமான உணவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மற்ற விலங்குகளை போன்று அல்லாமல்,. யானைகளுக்கு வழங்கப்படும் உணவு என்பது எப்போதும் வித்தியசாசமாக தான் உள்ளது. பசுபதி மே/பா ராசக்காப்பாளையம் படத்தில், ரஞ்சித்தின் வீட்டிற்கு செல்லும் விவேக்கிற்கு மிகப்பெரிய வடிவில் உருண்டை சோறு பிடித்து தருவார்கள். அதை பார்த்ததும் ஆஹா, இது உருண்ட சோறு இல்லடா, யானைக்கு கொடுக்குற கவலம்டா என, விவேக் பேசும் வீடியோ ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், யானைகளுக்கான கவலம் எவ்வாறு தயாராகிறது என்ற வீடியோ வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
சுற்றுச்சூழல் துறை கூடுதல் செயலர் சுப்ரியா சாகு தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் யானைகளுக்கான காலை உணவு நேரம். ஒவ்வொரு யானைக்கும் வரையறுக்கப்பட்ட உணவு பட்டியல் முகாமின் கால்நடை மருத்துவரால் கவனமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ராகி வெல்லம் சாதம் சிறிது உப்பு கலந்து, வெளியே காத்திருக்கும் யானைகளுக்கு உணவு உருண்டையாக வழங்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், அச்சடிக்கப்பட்ட உணவில் ராகி மாவு, வெல்லம் மற்றும் சிறிது உப்பு ஆகியவை சேர்த்து, பெரிய உணவு கவலங்களாக வனத்துறை ஊழியர்கள் உருண்டை பிடித்துள்ளனர். இரண்டு கைகளுக்கும் அடங்காத அந்த பெரிய உருண்டையை எடுத்து செல்லும் ஊழியர்கள், வெளியே காத்திருக்கும் யானைகளுக்கு வாயில் உணவை வைக்கின்றனர். ஒரே வாயாக அந்த உருண்டையை உள்வாங்கிக்கொண்ட யானைகள், சுவைத்து உண்டு மகிழ்கின்றன.