தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து ஹெல்த்மிக்ஸ் தொடர்பாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமாலை முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.
ஊட்டச்சத்து மாவு கொள்முதல் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
ஊட்டச்சத்து மாவை ஏன் ஆவினில் வாங்கவில்லை என்று கேட்கிறார்கள். அதனால் அரசிற்கு நஷ்டம் ஏற்படும் என்கின்றர். ஆனால். அதில் உண்மையில்லை. இந்த ஹெல்த்மிக்ஸ் திட்டம் ஏற்கனவே இருந்த அரசு அறிமுகப்படுத்தி வழங்கி வந்ததுதான். அதுவே இப்போதும் தொடர்கிறது. இந்தத் திட்டத்தின் கூழ் வழங்கப்படும் ஹெல்த்மிக்ஸ் உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்தது. உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த ஹெல்த்மிக்ஸ் விலை சந்தையில் ரூ.588 ஆக இருக்கிறது. ஆனால், டெண்டர் விடப்படுவது ரூ.460 தான். இந்த விலைக்குத்தான் அரசு கொள்முதல் செய்ய இருக்கிறது.
இதனால் அரசுக்கு ரூ.128 செலவு மிச்சம்தான். மேலும், இந்த ஊட்டச்சத்து மாவை ஆவினிலிருந்து கொள்முதல் செய்ய முடியாது. கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டக திட்டத்தில் முறைகேடு இருப்பதாக குற்றம்சாட்டுவது ஆதரமற்றது. இது ஊட்டச்சத்து அல்ல. டீ, காபி போல பாலில் கலந்து குடிக்கவே மக்கள் பயன்படுத்துவார்கள். சந்தை விலையை விட அதிகம் காசு கொடுத்து வாங்கினால் தவற எனச் சுட்டிக்காட்ட முடியும். ஆனால், நாங்கள் அப்படி செய்யவில்லை. இந்நிலையில், ஆதாரம் இல்லாமல் குற்றச்சாடுவது சரியானது அல்ல. தமிழ்நாடு அரசு சார்பில் ஹெல்த்மிக்ஸை ஆவினில் வாங்குமாறு எந்த அறிவுறுத்தலும் இல்லை. ” என்றார்.
மேலும், அவர் பேசுகையில், “நாங்கள் இதற்கு ஏற்கனவே தெளிவாக பதிலளித்துவிட்டோம். டெண்டர் ஓபன் செய்வதற்கு முன்பாகவே அதில் முறைகேடு நடைபெற்று உள்ளது என யூகங்களின் அடிப்படையில் பேசி வருகிறார், அண்ணாமலை. டெண்டர் பணிகள் முடிவடையும் முன்பாக ஊழல் நடைபெற்று உள்ளது. நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என கூறுவதை ஏற்றுகொள்ள முடியாது. இரண்டு நாட்களுக்கு பின்னரே அந்த டெண்டர் திறக்கப்பட உள்ளது. அதில், விலை மற்றும் தரம் ஆகிவற்றின் அடிப்படையிலேயே டெண்டர் வழங்கப்பட இருக்கிறது. டெண்டருக்கு முன்பே, இவருக்குத்தான் வழங்க இருக்கிறது என்று யூகத்தின் அடிப்படையில் கூறுவது எப்படி நியாமாகும்? இல்லை, ’டெண்டர் இவருக்கு கொடுக்கப்பட உள்ளது’ என்று சொல்பவருக்கு டெண்டர் வழங்க வேண்டும் என்கிறார்களா என்பதும் புரியவில்லை. ஆவினில் விலை குறைவு என்பதற்காக அவர்களிடம் கர்ப்பிணிகளுக்கான கிட்-க்காக பொருட்கள் வாங்க முடியுமா? நாங்கள் வழங்கும் ஊட்டச்சத்து மாவில் கர்ப்பிணிகளுக்கு தேவையான, உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த் 32 சத்து பொருட்கள் அடங்கியுள்ளது. இதற்கான ஏற்ற நிறுவனத்தை கண்டறிந்துதான் டெண்டர் விடப்படும். ஆனால், ஆவினில் வாங்கினால் நிதிச்சுமை குறையும் என்பதேல்லாம் பொருத்தமற்ற காரணமாக இருக்கிறது. “ என்றார்.
தாய் – சேய் நல ஊட்டச்சத்து பெட்டகத்தில் அரசின் நிர்பந்தத்தால் ஆவின் பொருள் புறக்கணிக்கப்பட்டதாலும் , தனியார் நிறுவனம் மூலம் இரும்புச் சத்து திரவம் கொள்முதல் செய்ததாலும் தமிழக அரசுக்கு 77 கோடி ரூபாய் நஷ்டம் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு தமிழ்நாடு அரசு சார்ப்பில் விளக்கமளித்ததில், 2018 ஆம் ஆண்டில் 11 நிபுணர்களுடன் கூடிய குழு அமைத்து மதர் ஹெல்த்கேர் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இரத்த சோகை, சிசு மரணம் உள்ளிட்டவைகளை தவிர்பதே இதன் நோக்கம் என்றும், இதில் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த 32 சத்து பொருட்கள் இருக்கின்றன என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.