காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் தங்கப் பல்லி மாயமானதாகவும், கோயிலில் உள்ள தங்கம், வெள்ளியிலான பல்லி சிலைகளை கோவில் நிர்வாகம் மாற்ற முயற்சிப்பதாக ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த, ரங்கராஜ நரசிம்மன் புகாரை இந்து அறநிலைத்துறை மறுத்துள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில்
இந்து அறநிலையத்துறை சார்பில் வெளியில் உள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டம் அருள்மிகு தேவராஜசுவாமி திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 46(3)-ன் கீழ் விளம்புகை செய்யப்பட்ட முதுநிலை திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் வரதராஜப் பெருமாள் திருக்கோயில் என்றும், அத்திவரதர் திருக்கோயில் என்றும் மக்களால் அழைக்கப்பட்டு வருகிறது. இத்திருக்கோயில் நிர்வாகம் செங்கல்பட்டு உதவி ஆணையரால் உதவி ஆணையர் / நிர்வாக அறங்காவலர் என்ற நிலையில் கூடுதல் பொறுப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது
தங்க பல்லி
இத்திருக்கோயிலில் வெள்ளியிலான சிறிய பல்லியும், தங்க பல்லி என்று அழைக்கப்படும் பித்தளையாலான பெரிய பல்லியும் உள்ள நிலையில், திருக்கோயிலில் வரதராஜப் பெருமாளை தரிசனம் செய்து விட்டு வரும் வயதான மற்றும் சிறிய வயது பக்தர்களால் உயரே அமைக்கப்பட்டிருந்த பல்லியைத் தொட்டு வணங்குவது சிரமமாக இருந்ததன் காரணமாக பக்தர்கள் நலன் கருதி இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்குட்பட்டு, சமூக பொறுப்புணர்வு நிதியின் (CSR Fund) மூலம் ரூ.76.90 இலட்சத்தில் மதிப்பீடு தயார் செய்து பணிகள் தொடங்கப்பட இருந்த நிலையில், இப்பணிகளுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அவ்வழக்கில் பக்தர்கள் நலன் சார்ந்த பணி என்பதால் திருக்கோயிலுக்கு சாதகமாக வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
விசாரணையில் நடந்தது என்ன ?
இந்நிலையில், அருள்மிகு தேவராஜசுவாமி திருக்கோயிலில் (வரதராஜப் பெருமாள்) தங்கபல்லி மாயமானதாகவும், திருக்கோயிலில் உள்ள தங்கம், வெள்ளியிலான பல்லி சிலைகளை திருக்கோயில் நிர்வாகம் மாற்ற முயற்சிப்பதாக ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவால் 05.11.2025 அன்று திருக்கோயிலின் உதவி ஆணையர்/நிர்வாக அறங்காவலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
மேற்படி புகாரின் மீது நடத்தப்பட்ட விசாரணையில், அனைத்து பணிகளும் துறையின் அனுமதி பெற்றே நடைபெறுகிறது என்றும், திருக்கோயில் தரப்பில் உரிய ஆவணங்கள் அளிக்கப்பட்டது என்றும் திருக்கோயில் உதவி ஆணையர்/நிர்வாக அறங்காவலர் தெரிவித்துள்ளார்.
நடந்தது என்ன ?
இந்நேர்வில், மண்டல இணை ஆணையரால் திருக்கோயில் நேரில் ஆய்வு செய்யப்பட்டதன் அடிப்படையிலும், கைவசமுள்ள ஆவணங்களையும் கவனமுடன் பரிசீலனை செய்ததிலும் ரங்கராஜன் நரசிம்மன் என்பவரால் சிலைத் திருட்டு தடுப்பு பிரிவினரிடம் திருக்கோயிலில் (வரதராஜப் பெருமாள்) தங்கபல்லி மாயமானதாகவும், கோயிலில் உள்ள தங்கம், வெள்ளியிலான பல்லி சிலைகளை கோவில் நிர்வாகம் மாற்ற முயற்சிப்பதாக தெரிவித்த புகார் முற்றிலும் பொய்யானது.
பக்தர்களின் நலன் கருதி திருவாளர்கள் L&T நிறுவனம் மூலம் தற்காலிக மரப்படிக்கட்டுகள், நகரும் பாலம் முதலான அடிப்படைப் பணிகள் ரூ.76.90 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இத்திருக்கோயிலில் உள்ள வெள்ளியிலான சிறிய பல்லியும், தங்க பல்லி என்று அழைக்கப்படும் பித்தளையாலான பெரிய பல்லியும் ஏற்கனவே பக்தர்களின் தரிசனத்திற்கு இருந்த இடத்திற்கு அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு
எனவே, தரங்கராஜன் நரசிம்மன் என்பவரால் சிலைத் திருட்டுத் தடுப்பு பிரிவினரிடம் அளிக்கப்பட்ட பொய்யான புகார் மீது சட்டவிதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் குமரதுரை தெரிவித்துள்ளார்.