சென்னை மாநகர அரசு பேருந்துகளில் மாதாந்திர பயண அட்டை மூலம் பயணம் மேற்கொள்பவர்களுக்கு சூப்பரான தகவலானது வெளியாகியுள்ளது. அதன்படி இனிமேல் மாதாந்திர பயண அட்டை பெற பேருந்து முனையங்களில் காத்திருக்க வேண்டிய தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

சென்னை ஒன் செயலி

தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறைகளில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பேருந்துகளில் கடுமையான சில்லறை பிரச்னை தொடர்ச்சியாக ஏற்பட்டு வந்த நிலையில், டிஜிட்டல் முறையில் பயணத்திற்கான கட்டணம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. இது பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பேருந்து ஊழியர்களின் மன அழுத்தத்தை குறைத்தது. 

இப்படியான நிலையில் அடுத்த சென்னை ஒன் செயலியானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த செயலி கடந்த நவம்பர் 13ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி மெட்ரோ ரயில், மின்சார ரயில் மற்றும் சென்னை மாநகர பேருந்துகள் என போக்குவரத்து சாதனங்களை ஒருங்கிணைத்து இதில் பணம் செலுத்தி டிக்கெட் பெற்று நாம் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

Continues below advertisement

பொதுமக்களிடையே வரவேற்பு

இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த திட்டம் சென்னை பெருநகர போக்குவரத்து அமைப்பால் தொடங்கப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த செயலியை கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தாலும் அதிகாரப்பூர்வமாக நவம்பரில் தான் வெளியானது. இதன்மூலம் ஒன் சிட்டி ஒன் டிக்கெட் என்ற முறையை பயன்படுத்தி பேருந்துகள், மெட்ரோ, புறநகர் ரயில்கள், வாடகை கார் மற்றும் ஆட்டோக்களில் க்யூ ஆர் கோடை பயன்படுத்தி பயணம் செய்ய அனுமதிக்கும். 

இதன் மூலம் தனித்தனியாக டிக்கெட்டுகள் வாங்கவோ, வரிசையில் நிற்கவோ செய்யாமல் சிரமமின்றி போக்குவரத்தை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இந்த செயலியில் பேருந்து மற்றும் ரயில்களின் பயண நேர அட்டவணையும் இடம் பெற்றிருக்கிறது. 

மாதாந்திர பயண அட்டை 

இந்த நிலையில் சென்னை மாநகர பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காகவும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கத்திலும் தொடங்கப்பட்ட சென்னை ஒன் செயலியில் அடுத்த அப்டேட்டாக மாதாந்திர பயண அட்டை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் பேருந்து முனையங்களில் பயணிகள் மாதாந்திர பயண அட்டை பெற நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல் உள்ளது. சென்னை மாநகரத்தை பொருத்தவரை ரூ.1,000 மற்றும் ரூ.2,000 என இரு வகைகளில் கோல்ட் மற்றும் டைமண்ட் பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படுகிறது. இதில் கோல்ட் பயண அட்டையை வைத்து குளிர்சாதன வசதி இல்லாத அனைத்து விதமான பேருந்துகளிலும் நாம் பயணம் செய்ய முடியும்.

டைமண்ட் அட்டை இருந்தால் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளிலும் நாம் செல்ல முடியும் இந்த நிலையில் சென்னை ஒன் செயலி மூலம் மாதாந்திர பயண அட்டை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பெறும் வழிமுறைகள் 

சென்னை ஒன் செயலி மூலம் உள் நுழையும் பட்சத்தில் அதில் மாநகரப் பேருந்து பாஸ் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் பஸ் பாஸ் வாங்குதல் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதில் ரூ.1,000 மற்றும் ரூ.2,000 என இரு வகை இருக்கும். அதில் உங்களுக்கு விருப்பமான அட்டையை தேர்வு செய்து அதற்கான கட்டணத்தை யுபிஐ பண பரிவர்த்தனை மூலம் செலுத்தலாம். 

இதன் மூலம் டிஜிட்டல் வடிவிலான பயண சீட்டு கிடைத்துவிடும் அதனை டவுன்லோட் செய்து பேருந்து நடத்தினவரிடம் காட்டினால் போதும். அவர் பயணச்சீட்டில் உள்ள பெயர், செல்லும்படியாகும் தேதி, நேரம் மற்றும் பிற விவரங்களை சரி பார்ப்பார். பின்னர் அதனை ஸ்கேன் செய்து அதற்குரிய ரசீதை வழங்குவார்கள். பயணச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் இருந்து 30 நாட்கள் மட்டுமே இதனை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இந்த புதிய டிஜிட்டல் முறையில் மாதாந்திர பயணச்சீட்டு பெறும் நடைமுறை குறித்து பயணிகளுக்கு போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த போக்குவரத்து ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.