தமிழ்நாட்டில் அமலில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிற்கான 20 சதவீதத்தில் வன்னியர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்வதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த ஒதுக்கீடு கடந்து வந்தப் பாதையைக் காணலாம்.
கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வன்னியர்களுக்கு போதுமான இட ஒதுக்கீடு இல்லையெனக் கூறி பாமக நீண்ட காலமாக போராட்டங்களை நடத்திவந்தது. இதனையடுத்து 1989ஆம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிற்குள் "மிகப் பிற்படுத்தப்பட்டோர்" (MBC)என்ற பிரிவை உருவாக்கியது. அதில் வன்னியர் உட்பட வேறு பல சாதியினரும் இடம்பெற்றனர். அதை வரவேற்ற பாமக, வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனியாக 20 சதவீத உள் ஒதுக்கீடு தர வேண்டுமென தொடர்ந்து கோரிவந்தது.
இந்நிலையில் கடந்த 2021, பிப்ரவரி 26ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில், 2021 சட்டசபை தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும் சில நிமிடங்களுக்கு முன்பாக ஒரு அவசரச் சட்டத்தை நிறைவேற்றியது அதிமுக அரசு. வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அளிப்பதாக அறிவித்தது. அப்போது பேசிய அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினருக்குள் பல்வேறு பிரிவினர்களுக்காக உள் ஒதுக்கீடு வழங்குவதற்காக பல்வேறு சமூகத்தினரால் வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஆய்வுசெய்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினரின் சமமான வளர்ச்சியை உறுதிப்படுத்த, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவனர் (வன்னியர்) 10.5 சதவீதம், சீர் மரபினருக்கு 7 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5 சதவீதம் என மூன்று பிரிவுகளாக உள் ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்துள்ளனர். ஆணையத்தின் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள அதற்கேற்ப இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நிறைவேற்ற அரசு முடிவுசெய்துள்ளது” என தெரிவித்தார்.
தமிழகத்தில் சாதிவாரியான புள்ளிவிவரங்களை சேகரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் தமிழக அரசு ஆணையம் அமைத்தது. அதன் அறிக்கை வெளியாகாத நிலையில், இந்த இடஒதுக்கீடு தற்காலிகமானது எனவும், 6 மாதத்திற்கு பின்னர் சாதிவாரிக் கணக்கீடு முடிந்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும், சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டிருந்தார். ஆனால் தென் மாவட்டங்களில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்த சட்டத்தை எதிர்த்து 25க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரம் முன், அரசியல் லாபத்துக்காக இந்த சட்டம் இயற்றப்பட்டதாக அந்த மனுக்களில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. முறையாக சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதுவே சட்டரீதியான இட ஒதுக்கீடு அமைய வாய்ப்பு அளிக்கும். ஆகவே, வன்னிய சமூகத்தினருக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை சாதிவாரி கணக்கீடு தொடர்பான முடிவுகள் வெளிவரும் வரை நிறுத்தி வைக்கவும், அதுவரையிலும் வன்னிய சமூகத்தினருக்கு 10.5% உள் ஒதுக்கீட்டை நடைமுடைப்படுத்த இடைக்கால தடை விதிக்கவும் வேண்டும் என மனுக்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" பரப்புரை கூட்டத்தில் பங்கேற்ற அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், வன்னியர் இடஒதுக்கீட்டை திமுகவே செயல்படுத்தும் எனத் தெரிவித்தார். இதனையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து திமுக அரசுப் பொறுப்பேற்றுக் கொண்டது. அப்போது வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்கான கோரிக்கைகள் திமுக அரசிடம் முனவைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 26-ஆம் தேதி 10.5% உள் ஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்கான அரசாணையை திமுக அரசு வெளியிட்டது.
வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் சிறப்பு அமர்வாக நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வில் விசாரிக்கப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிமன்றம், அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை எனக்கூறி 10.5% இட ஒதுக்கீடு வழங்கியது செல்லாது எனக்கூறி சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.