விழுப்புரத்தில் நடந்த நேரு யுவகேந்திரா இளையோர் விழாவில் பேச்சு போட்டிக்கு இந்தி, ஆங்கிலம் மட்டும் பிரதான மொழியாகவும், தமிழ் ஆப்ஷ்னல் மொழியாக வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் நேரு யுவகேந்திரா விழுப்புரம் மாவட்டம் சார்பில், இந்தியாவின் 75வது அமுத பெருவிழாவை கொண்டாடும் வகையில், இளையோர் விழா இன்று விழுப்புரம் செஞ்சிலுவை சங்க கட்டடத்தில் நடந்தது. இதனை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் துவக்கி வைத்தார். இதில், பள்ளி கல்லுாரியைச் சேர்ந்த 500 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு, கவிதை போட்டி, ஓவியம் வரைதல், கைபேசி புகைப்பட போட்டி, பேச்சுபோட்டி, கலைவிழா போட்டிகள், இளையோர் கலைந்துரையாடல் போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் பேச்சு போட்டியில் பங்கேற்போர்களுக்கு பிரதான மொழியாக இந்தி, ஆங்கிலம் தேர்வு செய்ய வேண்டும். தமிழக பிராந்திய மொழியாக தமிழ் ஆப்ஷ்னல் மொழியாக வைத்திருந்தனர். ஆனால் போட்டியில் பங்கேற்ற பெரும்பாலான மாணவ மாணவிகள் தமிழிலே பேசினர். ஒரு சிலர் மட்டுமே ஆங்கிலம், இந்தியில் பேசினர். இதுபோல் கவிதை போட்டியிலும், இந்தி, ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் அளித்து, தமிழ் ஆப்ஷ்னல் மொழியாக வைக்கப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திக்கு எதிராக தி.மு.க. கடும் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், நேரு யுவகேந்திரா போட்டிகளில் இந்திக்கு முக்கியத்துவம் அளித்து, தமிழ் ஆப்ஷ்னல் மொழியாக வைத்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.