ஹெலிகாப்டரில் சுற்றுலா
வானத்தில் பறக்கும் விமானத்தையும், ஹெலிகாப்டரையும் பார்த்து கை காட்டி சந்தோஷப்பட்டவர்கள், அந்த ஹெலிகாப்டரில் வானத்தில் பறந்து சுற்றிபார்க்க வாய்ப்பு கிடைத்தால் சும்மா விடுவார்களா.? அப்படிப்பட வாய்ப்பு தான் தற்போது உருவாகியுள்ளது. நவநாகரீக காலத்தில் சுற்றுலா திட்டங்களை விரிவுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ரயில்களில் சுற்றுலா, கப்பலில் சுற்றலா என பல சுற்றுலா திட்டங்கள் செயல்பட்டு வரும் நிலையில், தமிழகத்திலும் அதுவும் சுற்றுலாவிற்கு பெயர் பெற்ற வேளாங்கண்ணியில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்கப்படவுள்ளது.
வேளாங்கண்ணியில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம்
அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்கள் உள்ளது. குறிப்பாக வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம், நாகூர் தர்கா, சிக்கல் சிங்காரவேலவர் கோவில் உள்ளிட்ட ஆன்மிக சுற்றுலா இடங்களும், கோடியக்கரை பறவைகள் சரணாலயமும் அதிகளவில் உள்ளது. அதிலும் வேளாங்கண்ணிக்கு பல மாநிலங்கள் மட்டுமில்லாமல் பல நாடுகளில் இருந்தும் தினந்தோறும் பல ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கிறார்கள்.
எனவே சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், வேளாங்கண்ணி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் சுற்றுலா திட்டங்களை விரிவுப்படுத்த அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. காஷ்மீர் மற்றும் உத்தர்காண்டில் உள்ளது போல் வேளாங்கண்ணியில் ஹெலிகாப்டர் மூலம் சுற்றிபார்க்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கான ஹெலிகாப்டர் இறங்கு தளம் வேளாங்கண்ண்ணி ஆலயத்திற்கு சொந்தமான இடத்தில் தயார் செய்யப்பட்டு வருகிறது.
ஹெலிகாப்டர் சுற்றுலா - கட்டணம் என்ன தெரியுமா.?
ஹெலிகாப்டர் சேவை தொடங்குவதற்காக ஜெயம் ஏவியேசன் என்ற நிறுவனம் நாகை மாவட்ட நிர்வாகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஹெலிகாப்டர் சுற்றுலா மூலம் வேளாங்கண்ணியில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றிபார்க்கும் வகையில் சுற்றுலா திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர் சுற்றுலாவில் ஒருவருக்கு 6000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்காக ஹெலிகாப்டர் ஒன்று பெங்களூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு கொண்டுவரப்படவுள்ளது.
இந்த மாத இறுதியில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டுமே தற்போது ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு இயங்கும் வகையிலும் ஹெலிகாப்டர் பயணம் அமைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.