வட கடலோர தமிழகத்தில் வரும் 21- 24-ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வறண்ட காற்றானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியை மேலும் வலுபெற விடாமல் தடுக்கிறது. இதனால் நாளையும் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு மிகவும் குறைவு என கூறியுள்ளார். 21-ஆம் தேதி தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது எனவும் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 3-4 தினங்களுக்கு வட கடலோர தமிழகத்தில் நிலைக்கொண்டிருந்து மேகக்கூட்டங்கள் மூலம் சென்னை உட்பட் வட கடலோர தமிழக பகுதிகளில் 21-24ஆம் தேதி வரை அவ்வப்போது கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதியின் மேற்கு பகுதியில் இருக்கும் மேகக்கூட்டங்கள் வட கடலோர தமிழகத்தை நோக்கி நகர்ந்தால் கன மழை பெய்யும் எனவும், இல்லை என்ற நிலையில் அவ்வப்போது ஒரு சில பகுதிகளில் மட்டுமே கன மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தெற்கு தமிழகம் பொறுத்தவரை 25 முதல் 28ஆம் தேதி மழை பெய்ய வாய்ப்புள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது இதனால் இன்று முதல் தமிழ்நாட்டில் ஐந்து தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்பொழுது வலு பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் நிலை கொண்டுள்ளது எனவும் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும். அதனைத் தொடர்ந்து மூன்று தினங்களுக்குள் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா கடலூர் பகுதிகளை ஒட்டி வரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் கன முதல் மிககன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது
19.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
20.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
21.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
22.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.