மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தனது இரண்டாம் கட்ட ஆட்டத்தை தொடங்கியுள்ளது. அக்டோபர் மாதம் மத்தியில் அடுத்தடுத்து இரண்டு புயல் சின்னங்களால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனையடுத்து கடந்த வாரம் மழையின் தாக்கம் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் பருவ மழையானது கொட்ட தொடங்கியுள்ளது. நேற்று தமிழகத்தில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்த நிலையில் இன்று மாலை முதல் வட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

காற்றழுத்த தாழ்வு பகுதி

இந்த நிலையில் சென்னையில் நேற்று முதல் குளுமையான வானிலையே நீடித்து வருகிறது. லேசான தூறலோடு காற்றும் வீசி வருகிறது. இதனால் இதமான வானிலையை சென்னை மக்கள் ரசித்து வருகிறார்கள்.  இந்த நிலையில் இன்று பிற்பகல் முதல் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், தென்மேற்கு வங்ககடலில் நீடித்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இலங்கை நிலப்பரப்பின் மீது நீடித்து வருகிறது. 

இது அடுத்த 6 மணி நேரத்தில் மன்னார் வளைகுடா நோக்கி நகரக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இன்று காலை 6:30 மணி நிலவரப்படி நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் 12 செ.மீ அளவில் மிககனமழையும், மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் 9 செ.மீ, இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் 8 செ.மீ, நாகை மாவட்டம் வேதாரண்யம் 7 செ.மீ, இராமநாதபுரம் பாம்பன் 7 செ.மீ,  தலைஞாயிறு 6 செ.மீ, மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம், சீர்காழி, மயிலாடுதுறை தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

இன்று மாலை முதல் கன மழை

இலங்கை நிலப்பகுதியில் நீடிக்கின்ற தாழ்வு பகுதி காரணமாக கடலோர மாவட்டங்களில் மட்டும் நேற்றும் இன்றும் மழை பெய்துள்ளது. தாழ்வு பகுதி மன்னார் பகுதியை நோக்கி நகரும் போது தமிழகத்தில் மழை வலுவடையும். இன்றும், நாளையும் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழையும், ஒருசில இடங்களில் மிககனமழையும் பதிவாகும் என தெரிவித்துள்ளவர் சென்னையில் தற்போது தூறல் மழை தொடங்கியுள்ள நிலையில் இன்று பிற்பகலுக்கு பிறகு கன மழை தொடங்கும் என கூறியுள்ளார்.

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து காணப்படும். இன்றும் நாளையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பரவலாக கன மழையும் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது. எனவே இன்று மாலை பள்ளி மற்றும் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்புபவர்கள் குடை கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளார்.