Madurai School Leave: மதுரை மற்றும் கோவை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக, பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு பெய்ய தொடங்கிய கனமழை, விடிய விடிய தொடர்ந்து கொட்டி வருகிறது. இன்றும் மழை தொடர வாய்ப்புள்ளதாக, வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மதுரை மற்றும் கோவை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்குவதாக, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளுக்கும் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா விடுமுறை வழங்கியுள்ளார். இதேபோன்று திண்டுக்கல்லிலும் பெய்து வரும் தொடர்மழையால், பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், குந்தா மற்றும் கோத்தகிரி ஆகிய 4 தாலுக்காக்களில் மட்டும் இன்று ஒருநாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தேனி மாவட்டத்திலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, திருப்பூர் மாவட்டத்திலும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை:
தமிழ்நாட்டில் உள்ள 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு, மிக கனமழை பெய்யும் என மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, கோவை, நீலகிரி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை,தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, சேலம், கடலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தேனி, தருமபுரி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழைக்கு வாய்ப்பு:
இதனிடையே, அடுத்த மூன்று மணி நேரத்திற்கு செங்கல்பட்டு, செய்யூர், காஞ்சிபுரம், திருக்கழுகுன்றம், உத்திரமேரூர், வாலாஜாபாத் பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான இடியுடன் கூடிய மழை பெய்யும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.