தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், நீர்நிலைகள் தொடர்ந்து நிரம்பி வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அந்த மாவட்டத்தில் உள்ள ஒசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது. இன்று காலை சென்னையின் முக்கிய பகுதிகளான வடபழனி, விருகம்பாக்கம், பாரிமுனை, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, ஆலந்தூர், கிண்டி, கோடம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், காலையில் பணிக்கு செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
முன்னதாக தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அந்த மாவட்டத்தில் மிகப்பெரிய அணையான கிருஷ்ணகிரி அணையின் நீர்வரத்து இன்று காலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு ரூபாய் 7 ஆயிரத்து 129 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 7 ஆயிரத்து 428 அடி கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
சென்னை வானிலை ஆய்வுமையம் இயக்குனர் ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பில், தமிழகப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று, நாளை மற்றும் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, கரூர், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகள், நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.