காஞ்சிபுரத்தில் நள்ளிரவில் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை! இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை?
"காஞ்சிபுரத்தில் நள்ளிரவில் பெய்த கனமழை, வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை என்ன என்பது குறித்து தெரிந்து கொள்வோம்"

"காஞ்சிபுரத்தில் நள்ளிரவில் மூன்று மணி நேரத்திற்கு மேல் கனமழை பெய்ததால் குளிர்ந்த காற்று வீசி வருகிறது"
காஞ்சிபுரத்தில் கனமழை - Kanchipuram Rain
சென்னை வானிலை மையம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. சென்னை வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், காலை முதலே காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், இன்று இரவு நேரத்தில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது.
மேலும் காற்றுடன் கூடிய கனமழை நள்ளிரவு 12 மணி அளவில் தொடங்கிய கனமழை 3 மணி நேரத்துக்கு மேலாக தொடர்ந்து பெய்தது. குறிப்பாக காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம், ஓரிக்கை, செவிலிமேடு, சின்ன காஞ்சிபுரம், பெரிய காஞ்சிபுரம், ஒளிமுகமது பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 3 மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்ததால் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
மழை முன்னெச்சரிக்கை என்ன ?
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் மேல், வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு, திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், திருச்சி, நீலகிரி மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மூன்று செல்சியஸ் அதிகரிக்கும் வெப்பம்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.




















