டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 


தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மாநிலத்தில் பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. ஐப்பசி மாதம் அடைமழைக்காலம் என்பார்கள். அடைமழையாக இல்லாவிட்டாலும் வெயில் சூட்டை தணித்து பூமியை குளிர்வடைய செய்யும் வகையில் இலேசான முதல் மிதமான மழையானது பெய்து வருகிறது. இப்படியான நிலையில் தெற்கு அந்தமான் கடல்  பகுதிகளில் நிலவி வரும்  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில், குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. 


அதன்படி இன்று உருவான புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 16ஆம் தேதி வரை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


மேலும், “திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது” என சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கணிக்கப்பட்டிருந்தது. 


டெல்டா மாவட்டங்களைப் புரட்டிப்போடும் கனமழை


இதனிடையே நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேற்று தீபாவளிக்கு முன்பு வரை நல்ல மழைப்பொழிவு இருந்தது. அதன்பிறகு கடந்த 2 தினங்களாக மழை இல்லாமல் இருந்தது பொதுமக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் அம்மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் மட்டும் கிட்டதட்ட 17 செ.மீ. மழை பெய்துள்ளது. நாகை மாவட்டத்தில் இடைவிடாது 16 மணி நேரமாக கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது.இதனால் விடுமுறை தினமான நேற்று மக்கள் கூட்டமின்றி வேளாங்கண்ணி களையிழந்து காணப்பட்டது. மேலும் தொடர்ந்து மழை பெய்ததால் சாலைகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டனர்.


இதேபோல் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 12.3 செ.மீ., கடலூரில் 12 செ.மீ., பரங்கிப்பேட்டை 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது.