தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. வெயில் வாட்டி வந்தாலும், வெயிலைத் தணிக்கும் விதமாக தொடர்ந்து மாநிலம் முழுவதும் இதமான மழை பெய்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு காவிரி, பவானிசாகர் ஆகிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு மற்றும் காரைகால் பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 23ம் தேதி முதல் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 24ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் ஆகஸ்ட் 25ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.”இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கடலோரப் பகுதிகளில், 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திற்கு மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேரளா - கர்நாடக பகுதிகளிலும், லட்சத்தீவு கடலோரப் பகுதிகளிலும் சூறாவளி காற்று மிகவும் வேகமாக வீசும் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.
கோவையைப் பொறுத்தமட்டில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நகரம் முழுவதும் நடைபெற்று வருவதால், மழை பெய்யும் போது கோவை மக்கள் சிரமத்தினை எதிர்கொள்ள நேரிடும் என கோவை வாசிகள் தெரிவித்து வருகின்றனர். மேலும், அருகில் கேரளா இருப்பதால் மழையின் தாக்கம் எனபது அதிகமாகவே காணப்படும் எனவும் தெரிவித்துவருகின்றனர்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் அடுத்த இரு நாட்களுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சென்னையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதால் தமிழ்நாட்டின் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. சென்னைக்கு நீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகிய ஏரிகளிலும் போதியளவு நீர்மட்டம் இருப்பதால் இந்தாண்டு முழுவதும் நகரின் தேவைக்கு போதிய அளவு குடிநீர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.