தனிமை உணர்வால் பாதிக்கப்படும் இளைஞர்கள், "நட்பு ஆப்கள்" என்ற பெயரில் வரும் செயலிகளின் வலையில் சிக்கி, நிதி இழப்பு மற்றும் மனநல பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர் என மனநல நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மனநல ஆலோசகர் எச்சரிக்கை
தற்போது அதிகளவு நடைபெற்றுவரும் டிஜிட்டல் மோசடிகுறித்து மனநல ஆலோசகர் ப.ராஜ செளந்தர பாண்டியன் தெரிவித்தது...,” கவர்ச்சியான பெயர்களில் வரும் பல்வேறு தனியார் ஆப்கள், பாதுகாப்பான நட்பு வட்டத்தை உருவாக்கும் இடம் என்று விளம்பரப்படுத்தினாலும், போலி ப்ரொஃபைல்கள் மற்றும் ரோபோட் கணக்குகள் மூலம் பயனர்களை ஏமாற்றுவதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்களின் வேலைநுட்பம்
இந்த ஆப்கள் முதலில் இலவசமாக பதிவு செய்ய அனுமதித்து, பின்னர் "பிரீமியம் பிளான்" என்கிற பெயரில் பணம் செலுத்தாமல் பேச முடியாத நிலையை உருவாக்குகின்றன. மிகவும் ஆபத்தானதாக, பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பு இல்லாமல் வெளியில் செல்லும் வாய்ப்பு உள்ளதாக சைபர் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பொய்யான கதாபாத்திரங்களும் சட்டவிரோத செயல்பாடுகளும்
சைபர் க்ரைம் துறையின் அறிக்கைகளின்படி, சில நபர்கள் போலி பெண் கதாபாத்திரங்களை உருவாக்கி, ஆண் பயனாளர்களை பணம் செலவழிக்க வைக்கும் சட்டவிரோத வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மயக்கும் உரையாடல்கள், பொய்யான உணர்ச்சிகள், கற்பனையான காதல் உறவுகள் மூலம் இலக்கு வைக்கப்பட்ட இளைஞர்களிடமிருந்து பணம் பறிக்கின்றனர். இத்தகைய "கேட்ஃபிஷிங்" (Catfishing) மோசடியில் வேலை செய்யும் நபர்கள், ஒரு நாளைக்கு பல ஆண்களுடன் ஒரே நேரத்தில் பேசி, அவர்களை உணர்ச்சிவசப்பட வைத்து பணம் கேட்கும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
மனநல பாதிப்புகள்
மனநல நிபுணர்களின் கருத்துப்படி, போலி உறவுகள் மீண்டும் மீண்டும் முறியடிப்பதால், இளைஞர்களுக்கு நம்பிக்கையின்மை, தாழ்வு மனப்பான்மை உருவாகிறது. சிலர் உண்மையான வாழ்க்கையிலேயே மனிதர்களுடன் பழகுவதைத் தவிர்க்க ஆரம்பித்து விடுகின்றனர்.
நிபுணர்களின் எச்சரிக்கை
சைபர் க்ரைம் துறை அதிகாரிகள், இந்த ஆப்ஸ்களில் தனிப்பட்ட தகவல்களை பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர். நிதி மோசடி பற்றி எச்சரிக்கை சொல்வது போலவே, உணர்ச்சி மோசடி பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். இளைஞர்களை விளையாட்டு, கலாச்சாரக் குழுக்கள், சமூகச் செயல்பாடுகள் போன்ற உண்மையான மனித தொடர்பு உருவாகும் இடங்களுக்கு வழிநடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். நட்பு என்பது ஆப்ஸ்களில் கிடைக்கக்கூடிய ஒரு "பொருள்" அல்ல; அது மனிதர்களுக்குள் உருவாகும் உண்மையான பிணைப்பு என்று நிபுணர்கள் வலியுறுத்துவதாகவும்” தெரிவித்தார்.
மேலும் யூடியூப், இன்ஸ்டா பிரபலங்கள் இது போன்ற கேடு ஏற்படுத்தும் ஆப்ஸ்களை கண்டிப்பாக அறிமுகம் செய்யக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.