கடந்த டிசம்பர் மாதம் மற்றொரு அமர்வு சவுக்கு சங்கருக்கு வழங்கிய இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி, காவல்துறை தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதிலிருந்து விலக உயர்நீதிமன்ற நீதிபதி பி. வேல்முருகன் மறுத்துவிட்டார். ,அதோடு, சவுக்கு சங்கரை கடுமையாக சாடியும், எச்சரித்தும் உள்ளார். அது குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.
சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன்
மிரட்டி பணம் பறித்த வழக்கில் சவுக்கு சங்கர் கடந்த டிசம்பர் மாதம் 13-ம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரது தாயார் தாக்கல் செய்த மனுவில், சவுக்கு சங்கர் இதய நோயாளி மற்றும் நீரிழிவு நோயாளி என்று குறிப்பிட்டிருந்தார். இதனை ஏற்று, கடந்த டிசம்பர் 26-ம் தேதி உயர்நீதிமன்ற கிறிஸ்துமஸ் விடுமுறை கால அமர்வு, நிபந்தனையுடன் கூடிய இடைக்கால ஜாமீன் வழங்கி, 2026 மார்ச் 25-ம் தேதி சிறையில் சரணடைய உத்தரவிட்டது.
ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல்துறை தாக்கல் செய்த மனு
இந்நிலையில், இதனுடன் சேர்த்து, உடல்நலக் குறைவு அடிப்படையில் 17 குற்றவியல் வழக்குகளில் இடைக்கால ஜாமீன் பெற்றுள்ள சவுக்கு சங்கர், சாட்சிகளை மிரட்டுவதாகக் கூறி, அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை மாநகர காவல்துறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவிற்கு பதிலளிக்க சங்கரின் தாயார் ஏ.கமலாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியது.
இந்த வழக்கில், நீதிபதிகள் பி.வேல்முருகன் மற்றும் எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜனவரி 12-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. எனினும், விசாரணை ஜனவரி 18-ம் தேதிக்கு பின்னரே நடைபெறும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
காவல்துறையின் குற்றச்சாட்டு என்ன.?
ஆனால், சிறையிலிருந்து விடுதலையானது முதல் அவர் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்றும், அதில் ஜாமீன் ரத்து கோரி காவல்துறை மனு தாக்கல் செய்தது குறித்தும் அவர் வீடியோ வெளியிட்டுள்ளார் என்றும் காவல்துறை தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
மேலும், ஜாமீனுக்குப் பிறகு அவர் பதிவிட்ட வீடியோக்களை நிரூபிக்க காவல்துறை சமர்ப்பித்த பென் டிரைவை (Pen drive) ஏற்க உயர் நீதிமன்றப் பதிவுத்துறை மறுத்துவிட்டது என்று கூறப்பட்டிருந்தது. இதைக் கேட்ட நீதிபதி வேல்முருகன், அந்த பென் டிரைவை பொங்கல் விடுமுறைக்குப் பிறகு நடைபெறும் விசாரணையின் போது தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தினார்.
இதனிடையே சென்னை சைதாப்பேட்டை காவல் ஆய்வாளர் கே.சேது தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், விடுதலையான பிறகு அவர் ஒரே ஒரு முறை மட்டுமே இதய சிகிச்சை நிபுணரை அணுகியுள்ளார். ஆனால், 7 நாட்களில் தலா ஒரு மணி நேரம் ஓடக்கூடிய சுமார் 8 வீடியோக்களைப் பதிவிட்டுள்ளார். இது அவருக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகும். மேலும், வழக்கில் தொடர்புடைய சாட்சிகளை மிரட்டுவது மற்றும் விசாரணை அதிகாரிகளை அவதூறாகப் பேசுவது போன்ற செயல்களில் அவர் ஈடுபட்டு வருகிறார் என்றும் கூறப்பட்டது.
நீதிபதி விலகக் கோரி சவுக்கு சங்கர் மனு - விளாசிய நீதிபதி
இதனிடையே, நீதிபதி பி. வேல்முருகன் பாரபட்சமாக நடந்துகொள்வதாக குற்றம்சாட்டி, அவரை தன்னுடைய ஜாமீனை ரத்து செய்யக் கோரும் காவல்துறையின் மனுவை விசாரிப்பதிலிருந்து விலகுமாறும் கோரி, சவுக்கு சங்கர் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
ஆனால், விசாரணையிலிருந்து விலக முடியாது என்று நீதிபதி வேல்முருகன் இன்று மறுத்துவிட்டார். மேலும், சவுக்கு சங்கரை கடுமையாக சாடியுள்ள அவர், நீதிமன்ற நீதிபதி அமர்வை நீங்கள்(சவுக்கு சங்கர்) மிரட்ட முடியாது என்றும், தனது 20 ஆண்டுகளுக்கும் மேலான நீதித்துறை வாழ்க்கையில் (மாவட்ட நீதிபதியாக 11 ஆண்டுகள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதியாக ஒன்பது ஆண்டுகள் உட்பட) எந்த வழக்கையும் விசாரிப்பதில் இருந்து தான் ஒருபோதும் விலகவில்லை என்றும், மேலும் இந்த வழக்கிலிருந்தும் விலக மாட்டேன் என்றும் மூத்த நீதிபதி பி. வேல்முருகன் திட்டவட்டமாக கூறியதோடு, சவுக்கு சங்கரை கடுமையாக எச்சரித்துள்ளார்.
