உலகம் முழுவதும் புத்தாண்டு நாளை கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு புத்தாண்டும் பலரும் பல வித உறுதிமொழிகளை தங்களுக்குத் தானே எடுத்துக் கொள்வார்கள். அதை பலரும் நிறைவேற்றுவதில்லை. அதற்கு முக்கிய காரணம் அர்ப்பணிப்பு இல்லாமை.


ஆனால், புதியதாக பிறக்கும் 2025ம் ஆண்டை பலரும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து காத்துள்ளனர். அதற்கு காரணம் தொழில் ரீதியாக, படிப்பு ரீதியாக, சொந்த வாழ்க்கை ரீதியாக கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய அவசியத்தில் உள்ளனர். அதற்கு அவர்களின் கடந்த காலங்கள் முக்கிய காரணமாக இருக்கலாம். 2025ம் ஆண்டை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளவும், வாழ்க்கையை அடுத்தகட்டத்திற்கு நகர்த்த வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் கீழே உள்ளவற்றை பின்பற்றவும்.


எது வேண்டாம்?


நம்மில் பலருக்கும் உள்ள பெரிய குழப்பமே நமக்கு எது வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதே ஆகும். நமக்கு என்ன வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என்றால், முதலில் நமக்கு என்ன வேண்டாம் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். படிப்போ, வேலையோ வாழ்வை மாற்றும் எந்த விஷயத்திலும் மற்றவர்கள் என்ன கூறினாலும் நமக்கு வேண்டாம் என்று முடிவு செய்வதை செய்யக்கூடாது. ஏனென்றால் விருப்பமின்றி ஒரு செயலைச் செய்யும்போது அது நமது நேரத்தை விரயமாக்குவதுடன், நமது நம்பிக்கையை உடைக்கும். 


முடிந்தது முடிந்ததே:


இங்கு பலரால் தங்கள் வாழ்வை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் தடுமாறுவதற்கு கடந்த காலத்தில் நிகழ்ந்த தோல்விகள், ஏமாற்றங்கள், வலிகளை சுமந்து கொண்டு இருப்பது. அதை நினைத்துக் கொண்டே இருப்பதால் வீணாகப் போவது நிச்சயம் காலம் மட்டுமே. இதனால், நமது புத்துணர்ச்சியுடன் மன வலிமையும் மிக மோசமாக பலவீனம் ஆகும். இனி நடப்பது நாம் திட்டமிட்டதாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதை ஆழமாக முடிவு செய்யுங்கள். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் சிந்தியுங்கள்.


நேரமே முதலீடு:


இந்த உலகத்திலேயே மிகப்பெரிய முதலீடு பணமோ, பொருளோ, இடமோ இல்லை. நேரம்தான் மிகப்பெரிய முதலீடு. ஏனென்றால் மேலே கூறிய எதை வேண்டுமானாலும் இழந்தால் திரும்ப பெற முடியும். ஆனால், திரும்பபெறவே முடியாத ஒன்று நேரம் மட்டுமே. அந்த நேரத்தை நாம் எதற்காக செலவிடுகிறோம், யாருக்காக செலவிடுகிறோம். நம் வளர்ச்சிக்காக செலவிடுகிறோமோ என்பதே பிரதானம் ஆகும். கடந்த கால தோல்விகள், கவலைகளை நினைத்துக் கொண்டே இருந்தால் வீணாய்ப் போவது நேரம் எனும் முதலீடு மட்டுமே ஆகும். 


உங்களை மதிப்பீடுங்கள்:


இங்கு பலரும் தங்கள் திறமையை தாங்களே உணராத வரையிலும், அந்த திறமை அறிந்தும் அதை வெளிப்படுத்தாத வரையிலும் வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு நகராது. உங்களால் என்ன முடியும்? மற்றவர்களை காட்டிலும் நீங்கள் எந்த விதத்தில் தனித்துவமானவர்? என்று உங்களை நீங்களே எடைபோடுங்கள். இங்கு எந்த திறமையும் இல்லாத மனிதன் யாருமே இல்லை. நிச்சயம் ஏதேனும் ஒரு திறமை உங்களுக்குள் இருக்கும். அதைக் கண்டுபிடித்து உங்கள் திறமைக்கு எங்கு மதிப்பும், தேவையும் இருக்குமோ அங்கு உங்கள் உழைப்பை போடுங்கள். அதற்கான பலன் கண்டிப்பாகத் தேடி வரும். 


செயல்களால் பதிலடி:


உங்கள் தோற்றம், உங்கள் பின்னணி, உங்கள் படிப்பு என எதை வைத்து வேண்டுமானாலும் உங்களை மற்றவர்கள் ஏளனமாக கேலி செய்திருக்கலாம். அந்த ஏளனத்தை சவாலாக எடுத்துக் கொண்டு சாதித்து காட்டுங்கள். அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டோ, அவர்களிடம் சண்டையிடுவதோ வெற்றி ஆகாது. அவர்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத இடத்திற்குச் செல்வதே நீங்கள் அவர்களுக்கு தரும் தக்க பதிலடி. வரலாற்றில் என்றும் விமர்சனங்களை கடந்து வெற்றி பெறுபவர்களுக்கு தனி மதிப்பு உண்டு. நீங்கள் வரலாறு படிக்கப் போகிறீர்களா? வரலாறு படைக்கப் போகிறீர்களா? என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.


முடிவை நீங்களே எடுங்கள்:


இங்கு பலரும் தடுமாறுவதற்கு காரணம் அவர்களுக்கான முடிவை அவர்கள் எடுக்காமல் இருப்பது ஆகும். வாழ்க்கையை மாற்றும் தொழில், வேலை, வாழ்க்கைத் துணை மாதிரி விவகாரங்களில் நண்பர்களின் ஆலோசனையைக் கேட்பது தவறு இல்லை. ஆலோசனைகளின் முடிவில் முடிவை நாம்தான் எடுக்க வேண்டும். நாளை அந்த முடிவில் தவறு வந்தால் நண்பர்களை பழிபோடக்கூடாது. அதேபோல முடிவு பிரம்மாண்ட வெற்றி பெற்றால், நான்தான் இவருக்கு வழிகாட்டினேன் என்று அடுத்தவர் நம்மை ஏளனமாகவும் பேசிவிடவும் கூடாது. 


உங்களுக்கு நீங்கள்தான் ஹீரோ:


முதலில் உங்களுக்கு நீங்கள்தான் ஹீரோ. உங்கள் தோற்றம் வைத்தோ, உங்கள் ஆடைகளை வைத்து உங்களை யார் என்ன கூறினாலும், உங்களை ஒரு நாயகன் போல எண்ணிக்கொள்ளுங்கள். நல்ல ஆடைகளைத் தேர்வு செய்யுங்கள். நாகரீகமான உடைகளை அணியுங்கள். உடைகள் தரும் தன்னம்பிக்கைத் தனித்துவமானது. நன்றாக ஆடை அணிந்து பாருங்கள் உங்களை கேலி செய்தவர்கள் கூட வாயடைத்துப் போவார்கள். 


எங்கு இருக்க வேண்டும்?


இங்கு பலருக்கும் தங்களின் திறமை, தங்களின் திறமை மீது நம்பிக்கை இருக்கும். ஆனால், அந்த திறமையை எந்த இடத்தில் காட்ட வேண்டுமோ அந்த இடத்தில் காட்டாமல் தவறான இடத்தில் உழைப்பை வீணாக்கிக் கொண்டிருப்பார்கள். உங்கள் உழைப்பிற்கு எந்த இடத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படுமோ அந்த இடத்தில் உழைப்பை அளியுங்கள்.


மேலே கூறியவற்றைச் செய்யும்போது நிச்சயம் தொடக்கம் உண்மையில் கடினமாக இருக்கும். ஆனால், எந்த கேலி வந்தாலும் தொடர்ந்து இதைப் பின்பற்றினால் நிச்சயம் 2025ம் ஆண்டு உங்கள் வசமே ஆகும்.