திருச்சி மணப்பாறை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். கல்கொத்தனூரில் அரசு பேருந்தும் காரும் மோதியதில் இந்த விபத்து நடந்துள்ளது.


தலைகீழாக கவிழ்ந்த அரசு பேருந்து:


திருச்சியிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பேருந்து திருச்சி மணப்பாறை அருகே உள்ள கல்கொத்தனூர் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது எதிரே வந்த கார் பேருந்து மீது மோதியதில் நிலை தடுமாறிய பேருந்து சாலையிலிருந்து தலைகீழாக கவிழ்ந்து விட்டது.


இந்த கொடூர விபத்தில் முதல் கட்டமாக ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ்கள் மூலம் காயமுற்றவர்கள் திருச்சி மணப்பாறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


சமீபத்தில், கடலூரில் தனியார் பேருந்து ஒன்று மற்றொரு தனியார் பேருந்து மீது மோதி 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. இதில் 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.


அதிகரிக்கும் சாலை விபத்துகள்:


இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் 2021ஆம் ஆண்டு 4,12,432 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1,53,972 பேர் மரணம் அடைந்துள்ளனர். 3,84,448 பேர் காயம் அடைந்துள்ளனர். 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2020-ம் ஆண்டு இந்தியாவில் 3,84,448 விபத்துகளில் 1,31,714 பேர் மரணம் அடைந்தனர். 3,48,279 பேர் காயம் அடைந்தனர்.



2021-ம் ஆண்டு தமிழகத்தில் 55,682 விபத்துகள் பதிவாகி உள்ளது. இதன்படி, அதிக விபத்துகள் பதிவான மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் 10,000 சாலை விபத்துகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன. 2021-ம் தமிழகத்தில் நடந்த சாலை விபத்துகளில் 15,384 பேர் மரணம் அடைந்தனர். இதன்படி அதிக மரணங்கள் பதிவான மாநிலங்களில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் 5,000 மரணங்கள் அதிகரித்துள்ளது.




2021-ம் ஆண்டு நடந்த விபத்துகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் 1,28,825, மாநில நெடுஞ்சாலைகளில் 96,382, மற்ற சாலைகளில் 1,87,225 விபத்துகள் பதிவாகி உள்ளது. இதில் தேசிய நெடுஞ்சாலைகளில் 56,007, மாநில நெடுஞ்சாலைகளில் 37,963, மற்ற சாலைகளில் 60,002 பேர் மரணம் அடைந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலைகளில் 1,17,765, மாநில நெடுஞ்சாலைகளில் 92,583, மற்ற சாலைகளில் 1,74,100 பேர் காயம் அடைந்துள்ளனர்.



தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகம் விபத்துகள் நடந்த மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 16,869 விபத்துகள் பதிவாகி உள்ளன. மரணங்களின் எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. இதன்படி 5,263 பேர் மரணம் அடைந்துள்ளனர்.