தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, சனாதன தர்மத்திற்கு ஆதரவாக பேசி வருவது பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. சமீபத்தில், வடலூரில் வள்ளலாரின் 200ஆவது ஜெயந்தி விழாவில் உரையாற்றிய அவர், சனாதன தர்மத்தைப் பற்றி விரிவாகக் குறிப்பிட்டு, அதை வள்ளலார் பின்பற்றியதாக கூறினார்.


ஆளுநரின் வள்ளலார் குறித்து கருத்து:


"பத்தாயிரம் ஆண்டுகால பாரம்பரியத்தைக் கொண்ட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் பெருமான். காழ்ப்புணர்ச்சியாலும் அறியாமையாலும் சனாதன தர்மத்தைப் பற்றி சில மனிதர்கள் தவறான எண்ணப் போக்கைக் கொண்டிருக்கிறார்கள். 


சனாதன தர்மம் என்றால் என்ன? நமது ரிஷிகளும் ஞானிகளும் உலகின் துவக்கமென்ன, படைப்பின் மூலமென்ன என்பதை நாம் எளிய முறையில் புரிந்துகொள்வதற்காக நமது உபதேசங்களின் மூலமாகவும் தத்துவங்களின் மூலமாகவும் வழிகாட்டிச் சென்றிருக்கிறார்கள்" என ஆளுநர் கூறினார். வள்ளலார் குறித்த கருத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். 


"சனாதன தர்மத்தை பிடித்து காக்கின்ற நிலம் தமிழ்நாடு"


இந்த நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ராகவேந்திரா மடத்தின் ஜெகத்குரு ஶ்ரீமன் மத்வாச்சாரியார் மூல மகா சமஸ்தானத்தின் 50ஆவது ஆண்டு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று உரையாற்றியுள்ளார்.


அப்போது, சனாதன தர்மம் உருவாக காரணமாக இருந்தது தமிழ்நாடு என ஆளுநர் கூறியுள்ளார். இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "தமிழ்நாடு புனிதமான நிலம். வளமான நாடு. பல ஆண்டுகளாக புனிதர்களும், மகான்களும் வாழ்ந்த நாடு. சனாதன தர்மம் உருவாக காரணமாக இருந்தது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது தான் சனாதன தர்மம்.


இந்த சனாதன தர்மம் துவங்க தமிழகம் முக்கிய பங்கு வகித்துள்ளது. சநதானத்தில் தீண்டாமை வலியுறப்படுவதில்லை. இந்தியாவுக்கு என்று ஓர் அறிமுகம் தேவைப்படுகிறது. ஆனால் பாரதத்திற்கு அறிமுகம் தேவையில்லை. 10 ஆயிரம் ஆண்டுகளாக இது உள்ளது. சனாதனம், சமஸ்கிருதியை உருவாக்கி பல இடங்களுக்கு பரவ செய்துள்ளது இந்தியாவை பாரத் என்கிறது.


1000 ஆண்டுகள் வெளிநாட்டினர் ஆட்சியில் பலர் அதை மறந்து விட்டனர். இது சனாதன நாடு. 1947இல் தான் நாடு உறுவானது என்று நினைக்கின்றனர். அது, எனக்கு நகைப்பாக உள்ளது. சனாதன தர்மம் மக்களை பிரிக்கிறது என்றால் அது தவறு. சனாதன தர்மத்தை பிடித்து காக்கின்ற நிலம் இது. இந்த நிலத்தில் பிறந்ததால் அரவிந்தர் ரிஷி அரவிந்தரானார்" என்றார்.


கடந்த ஜனவரி மாதம், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் 176வது ஆராதனை விழாவில் பேசிய ஆர்.என்.ரவி, "இந்திய நாடு வலிமைமிக்க ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டது அல்ல. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ரிஷிகள், முனிவர்களால் உருவாக்கப்பட்டது. நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்பதே பாரதம். சனாதன தர்மத்தால் மட்டுமே இது சாத்தியமானது.


இந்தியாவின் கலாச்சார அடையாளம் ராமர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மக்களை ராமர் ஆன்மீகத்தால் இணைத்துள்ளார்.  உங்களில் என்னையும், என்னில் உங்களையும் காண்பது தான் சனாதன தர்மம். சனாதன தர்மம் என்பது தெற்கிலிருந்து தான் துவங்கியது. அதுவும் குறிப்பாக, தமிழகத்தில் இருந்து தான் துவங்கியது" என்றார்.