விழுப்புரம்: விழுப்புரத்தில் சித்த மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்காமல் உள்ளதாக அமைச்சர் பொன்முடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
விழுப்புரம் திருவிக வீதியிலுள்ள அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் பொன்முடி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன் புகழேந்தி, எம்பி ரவிக்குமார், ஆட்சியர் பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டு துவக்க வைத்தனர். இந்த மருத்துவ முகாமில் 12 விதமான உயர் சிகிச்சை பிரிவுகள் உள்பட அனைத்து விதமான மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தொழிலாளர் நலத்துறை சார்பில் முகாம்கள் அமைக்கப்பட்டு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவ காப்பீட்டுக்கான பதிவும் இந்த மருத்துவ முகாமில் செய்யப்பட்டு வருகிறது. இந்த மருத்துவ முகாமில் விழுப்புரம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதனை தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி...
தமிழக முதலமைச்சரின் இரு கண்களாக சுகாதாரமும் கல்வியும் இருந்து வருவதாகவும் இந்தியாவிலேயே இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி திட்டம் தமிழகத்தில் கொண்டு வரப்பட்டு இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறினார். விழுப்புரத்தில் சித்த மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் கல்லூரி தொடங்குவதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் வைத்துள்ளதாகவும் வாக்களித்தவர்கள் வாக்களிக்காதவர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்மை செய்து கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டுமென அமைச்சர் பொன்முடி கேட்டுகொண்டார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்